காண்கிற தேவன்(The God who sees):-

ஆதியாகமம் 16 : 13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JTcUtcIxEng

ஆதியாகமம் 16ம் அதிகாரத்தை வாசிக்கும்போது கர்த்தர் ஆகாரை சந்தித்த ஒரு சம்பவத்தை தெரிந்துகொள்ள முடியும். ஆகார் ஒரு அடிமை பெண், புறஜாதி பெண், எகிப்து தேசத்து பெண்; அவள் கார்பந்தரித்தவுடனே தன்னுடைய நாச்சியாரால் கடுமையாக நடத்தப்பட்டாள்; ஆபிராமுடைய  உதவியை சரியாக பெறமுடியாமல் தவித்தாள். இதனிமித்தமாக அவள் தன்னுடைய எஜமாட்டியை விட்டு அதாவது தன்னுடைய நாச்சியாரை விட்டு கடந்து செல்கிறவளாக காணப்பட்டாள். வனாந்தரத்தில் நடந்து சுற்றினாள்.  இப்படிப்பட்டதான சூழ்நிலையில் கர்த்தர் ஆகாரை வனாந்தரத்தில் கண்டு நீ உன் நாச்சியாரின் கையில் அடங்கி இரு என்று சொல்கிறதை பார்க்கிறோம். ஒருவேளை நம்முடைய வாழ்வும் கூட ஆகாரின் சூழ்நிலையை போல வனாந்தரமாக காணப்படலாம்; எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலை வரலாம். ஆனால் சூழ்நிலைகளை பார்த்து ஓடுகிறவர்களாக நாம் காணப்படலாகாது. மாறாக கர்த்தர் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்க கற்று கொள்ள வேண்டும். ஆகாரை பார்த்து நீ சூழ்நிலையை பார்த்து ஓடுவது என்னுடைய சித்தமல்ல; மாறாக உன்னுடைய எஜமாட்டியின் கரத்தில் அடங்கி இருக்கும் படியாக சொல்கிறார்.

மாத்திரமல்ல கர்த்தர் ஆகாருக்கு ஒரு வாக்குத்தத்ததை கொடுக்கிறார் இதே அதிகாரம்  10 முதல் 12ம் வசனத்தை படிக்கும்போது பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்று கர்த்தர் சொல்கிறதை பார்க்கமுடியும்.

அதன்பின்பதாக ஆகார் தேற்றப்பட்டவளாக சொன்னாள் என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

ஒருவேளை இந்த உலகத்தில் என்னை கண்டு கொள்ள யாருமில்லை என்று நினைத்து கொண்டிருப்பீர்களென்றால், உங்களுடைய வாழ்வில் யார் உங்களை கண்டு கொண்டாலும்; இல்லை கண்டுகொள்ளாமல் போனாலும் சரி; உங்களை கண்டு கொள்ள ஒருவர் உண்டு; உங்கள் மேல் நோக்கமாயிருக்கிற தேவன் ஒருவர் உண்டு. அவர் உங்களை நடத்துவார், ஆதரிப்பார், தேற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

உங்களை காண்கிற தேவன் உங்களோடு கூட இருபராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org