ஊரீம், தும்மீம்(Urim and Thummim).

நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக, ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள்  அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்,  ஆரோன்  தன்  இருதயத்தின்மேல்  இஸ்ரவேல்  புத்திரருடைய  நியாயவிதியைக்  கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்  (யாத். 28:30).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yZ_cfIJtvFM

பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆசாரியர்கள் நியாயவிதி மார்பதக்கத்தை  தங்கள் மார்புகளிலே தரித்திருப்பார்கள். அவைகளில் ஊரிம் தும்மிம் என்ற கற்களைப் போட்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவதற்குப் பயன்படுத்துவார்கள். இதற்கு வெளிச்சமும், பூரணமும் (Light and Perfection) என்ற இன்னொரு அர்த்தமும் உண்டு. யுத்தத்திற்கு போகலாமா? வேண்டாமா? என்றும், குறிப்பிட்ட காரியங்களைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்பதைப் போன்ற  காரியங்களில் பூரண வெளிச்சத்தைக்  கண்டுகொள்ளுவதற்கு  இவைகளை பயன்படுத்துவார்கள்.  பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்ய வந்தபோது சவுல் ராஜா மிகவும் பயந்தான், அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள விரும்பினான். சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை என்று 1 சாமு. 28:6ல்  எழுதப்பட்டிருக்கிறது.  காரணம் சவுல் தன்னுடைய கீழ்ப்படியா மையின்  நிமித்தம் ஆண்டவரோடு காணப்பட்ட ஐக்கியத்தை இழந்து போனான். ஆகையால், ஊரிம் தும்மிம் மூலமும் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுவதற்கு அவருக்கு பிரியமான ஜீவியம் செய்யவேண்டும்.

பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாகி எருசலேமுக்கு திரும்பி வந்த பின்பு, திர்ஷாதா என்ற ஜனத்தின் அதிபதி, ஊரீம் தும்மீம் என்பவையுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று சொன்னான் என்று நெகேமியா 7:65ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அணியத்தக்க ஆசாரியன் அதற்கு பின்பு எழும்பினதாக வேதத்தின் மூலம் அறியமுடியவில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவையில்லை, பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களோடு, தேவன் ஆசாரியர்கள்  மூலமும் தீர்க்கதரிசிகள் மூலமும்  பேசினார்.  ஆனால் இன்று கர்த்தர் நம்மோடு நேரடியாகப் பேசுகிறார், அவருடைய வார்த்தைகள் மூலம் பேசுகிறார், ஆவியானவர் நமக்குள்ளாய் வாசம் பண்ணி,  வழியிதுவே  இதிலே  நடவுங்கள் என்று கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார். நாம் ஜெபிக்கும் போது தேவச்சித்தத்தை அறிந்துகொள்ளும் படிக்குச்  செய்கிறார்.  ஆனால்  இந்நாட்களிலும்   என்ன  சம்பவிக்கும்  என்பதைக்  கணிக்கிறவர்களைத்  தேடிச் செல்லுகிற கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை  அதிகம்.  ஆகையால் நீங்கள் தேவனுக்குப் பிரியமான ஜீவியம் செய்து, அவரோடு சஞ்சரிக்கிறவர்களாய் காணப்படுங்கள், அப்போது நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைக் கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar