மத்தேயு 27:29,30 . முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Bzz_SjldgEY
இயேசு தன்னுடைய சிலுவை பாதையில் கடந்து சென்ற போது அவருடைய தலையில் முள்முடியை சூட்டினார்கள். முள் சாபத்திற்கு அடையாளம். நம்முடைய சாபங்களையெல்லாம் போக்கும்படியாக இயேசு முள்முடி சூட்டப்பட்டவராக சிலுவையில் தொங்கினார்.
இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள் 1.5” நீளம் உள்ளதென்றும், அப்படியாக 90 முட்களை இயேசுவின் தலையில் சூட்டினார்களென்றும் வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். ஒருமுள் குத்தும்போது அது இயேசுவின் கண் வழியாக வந்துவிட்டதாம். அதனால் கண்களில் இரத்தம் கட்டி ஒரு கண் பார்வையை இயேசு இழந்துவிட்டார் என்று சொல்லுகிறார்கள். அந்த முள் கொடிய விஷமுள்ளது. ஒரு முள் ஒரு தேள் கொட்டுவதற்கு சமம் என்று சொல்லுகிறார்கள். அப்படியென்றால் 90 முட்களென்றால் 90 தேள்கள் தொடர்ந்து அவருடைய தலையை கொட்டிக்கொண்டிருப்பதற்கு சமனான வேதனை இயேசுவுக்கு இருந்தது. நம்முடைய காலில் ஒரு சிறு முள் குத்தினாலே அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசுவின் தலையில் 90 முட்களை சூட்டினார்கள். தாங்கமுடியாத வேதனை நம் இரட்சகருக்கு வந்தது.
மாத்திரமல்ல இயேசுவின் கையில் ஒரு கோலை கொடுத்தார்கள். அந்த கோலாலே இயேசுவின் தலையில் அடித்தார்கள். ஏற்கனவே முள்முடி சூட்டப்பட்டதினால் அந்த முற்கள் இயேசுவின் தலையில் பதிந்து தைத்துக்கொண்டிருந்தது. அதையும் தாண்டி முற்கள் பதிக்கப்பட்ட தலையில் கோலால் அடித்தார்கள். அப்படி அடிக்கும்போது இன்னும் அதிகமாக முற்கள் இயேசுவின் தலைக்குள் குத்தி பதிந்தது.
இத்தனை வேதனைகளையும் இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் சகித்தார். நம்முடைய தலைமுறை சாபங்கள் எல்லாவற்றையும் நீக்குவதற்காக முள்முடி சூட்டப்பட்டவராக இயேசு சிலுவையில் தொங்கினார். இன்று உங்களை தலைமுறை சாபம் பின்தொடர்கிறதாக காணப்படுகிறதா? குடும்பத்தில் வருகிற திடீர் மரணங்கள், தலைமுறையை சங்கரித்து வரும் சாபங்கள் நீங்க வேண்டுமா ? அப்படியென்றால் முள்முடி சூட்டப்பட்ட இயேசுவை பாருங்கள். எப்பொழுது நீங்கள் முள்முடி சூட்டப்பட்ட இயேசுவை பார்த்து உங்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு மனம்திரும்புகிறீர்களோ, அப்பொழுதே தலைமுறை சாபங்களுக்கு இயேசு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவார். உங்கள் வாழ்க்கை சாபமாயிருக்க வேண்டும் என்பது தேவ சித்தமல்ல. எப்பேர்ப்பட்ட சாபத்தையும் நீக்கி சுத்திகரித்து உங்களுக்கு புது வாழ்வு தர இயேசுவால் முடியும்.
முற்கிரீடம் சூட்டப்பட்ட இயேசுவின் தலையை பாருங்கள், பொற்கிரீடம் சூட்டி உங்களை மகிழும்படி செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org