விருப்பமும்,    செய்கையும்(Willing and Doing).

ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலி. 2:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3Cd6KLKzn2s

கர்த்தருடைய  பிள்ளைகளுக்குள்ளாகப் பலவிதமான விருப்பங்கள் காணப்படுவதுண்டு,    ஆனால் அவைகளை நடைமுறைப்படுத்துகிற செய்கைகள் நம்மில் காணப்படுவதில்லை. இரட்சிக்கப்பட வேண்டும்,    கர்த்தருக்குப் பிரியமாக ஜீவிக்கவேண்டும்,    பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்,    ஊழியம் செய்ய வேண்டும்,    நற்கனி கொடுக்கிற பாத்திரங்களாய் காணப்படவேண்டும்,    ஊழியங்களுக்கு விதைக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட பலவிதமான விருப்பங்கள் இருப்பதுண்டு. ஆனால் சிலர் குடும்பங்களுக்குப் பயந்து மனந்திரும்புதலுக்கு அடையாளமான ஞானஸ்நானம் எடுப்பதில்லை. பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளுவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுப்பதில்லை. ஊழியம் செய்வதற்கு தங்களை ஆயத்தப்படுத்தி  அர்ப்பணிப்பதில்லை.  கனிகொடுக்கிற ஜீவியம் செய்வதில்லை,    கர்த்தருக்காக விதைக்க விரும்புவதில்லை. மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது,    தேவன் நம்மில் விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறார்  என்று. 

தாவீது கேதுரு மரத்தினால் கட்டப்பட்ட வீட்டில் வாசமாயிருந்த வேளையில்,    கர்த்தருடைய பெட்டி திரைச்சீலைகளின் பின்னால் காணப்பட்டதினால் அவனுக்குள் பாரமும் துக்கமும் வந்தது. அந்த பாரத்தை நாத்தான் தீர்க்கதரிசியோடு பகிர்ந்து கொண்டான். அவன் உம் மனவிருப்பத்தின்படி செய்யும் கர்த்தர் உம்மோடிருக்கிறார் என்று உற்சாகப்படுத்தினான். ஆனால் கர்த்தர்,    தாவீது அதிகமாய் இரத்தம் சிந்தினதினால் அவன் ஆலயத்தைக் கட்டுவதில்லை,    அவன் குமாரன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கூறினார். ஆகையால் தாவீது ஆலயம் கட்டுவதற்கு வேண்டிய அத்தனைக் காரியங்களையும் ஆயத்தப்படுத்தினான். அவனுடைய விருப்பத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லையென்றாலும்  அதைக் செய்வதற்குரிய  எல்லாப் பொருட்களையும் சவதரித்து வைக்கக் கர்த்தர் கிருபையைக் கொடுத்து அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். நெகேமியாவுக்குள் அலங்கத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் காணப்பட்டது. அவனுக்குக் கர்த்தர் ராஜாவின் கண்களில் தயையைக் கட்டளையிட்டார். குறிப்பிட்ட நாளில் அலங்கத்தைக் கட்டி முடிக்கவும் உதவிசெய்தார். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்களுக்குள்ளாகக்  கர்த்தருக்காக  ஏதாகினும் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்மையாய் காணப்படுமென்றால் அதை நிறைவேற்றுவதற்குரிய செய்கையைக் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுவார். ஆனால் உண்மையும் உத்தமும் உங்களுக்குள்ளாகக் காணப்படாமல் இருக்கும் போதும்,    உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதிகளைக் கொடுப்பதினாலும் காரியங்களை நிறைவேற்ற உங்களால் இயலாமல் போகிறது. அனேக வேளைகளில் கர்த்தரிடத்திலிருந்து ஒரு நன்மையைப் பெறுவதற்கும்,    வருடங்களின் துவக்கத்திலும் தீர்மானங்களை எடுக்கிறோம்,    வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம். கர்த்தர் உங்களைக் கனப்படுத்தி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றின பின்பு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகிறீர்கள். தேவன் இந்த புதிய மாதத்தில் உங்களுக்குள்ளாகக் கர்த்தருக்குரிய காரியங்களைச் செய்ய விருப்பத்தையும்,    அதை உங்களுக்குரியதிலிருந்து எடுத்த நிறைவேற்றுவதற்கும் வேண்டிய கிருபையை பரத்திலிருந்து தருவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae