கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள் (Enemies of the cross of Christ).

பிலி 3:18. ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1JgICxfy7tM

பவுல் அழுது கண்ணீர் வடிக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இந்த வசனத்தில் பார்க்கிறோம். மிகப்பெரிய அப்போஸ்தலன், வல்லமையான ஊழியக்காரன், சுவிசேஷத்தினால் பெற்ற தன் ஆட்டுமந்தையிடம் ஒரு காரியத்தை குறித்து எழுதும்போது அவர் கண்ணீரோடு எழுதுகிறார். அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்ற காரியத்தை கண்ணீரோடு எழுதுகிறார். காரணம் சபை ஜனங்கள் அப்படிப்பட்ட நபர்களால் வஞ்சிக்கப்பட்டு போய்விட கூடாது என்ற நல்ல உள்ளத்தில் சொல்லுகிறார். வேறுவிதமாக அதாவது சுவிசேஷத்திற்கு விரோதமாய் நடப்பவர்களை, போதிப்பவர்களை பற்றி நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று பவுல் கூறுகிறார். ஒரு நபரை பார்த்து அவர் நாய் என்று எளிதாய் நாம் சொல்லிவிட முடியாது. ஆனால் பவுல் சிலரை நாய்களுக்கு ஒப்பாய் சொல்லுகிறாரென்றால், அவர்கள் எவ்வளவாய் ஜனங்களை சீரழிக்க பார்க்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்.

அவர்கள் எப்படி பிரசங்கிக்கிறார்கள் ? பவுல் செல்லுகிறார், சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள் (பிலி 1:15,16) என்பதாக. இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள். கலாத்திய சபைக்கு பவுல் எழுதும்போதும் சொல்லுகிறார் வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல (கலா 1:7) என்பதாக.

ஒருபுறம் மந்தையை கெடுக்கிற ஓநாய்களும், குள்ளநரிகளும் சபைக்குள்ளாகவே பெருகி இருக்கிறார்கள். அதுபோல இந்நாட்களில், சபைக்கு வெளியே இருப்பவர்கள், சபையிலிருக்கும் சிலுவையை தூக்கி எரிந்து தங்கள் கொடிகளை நிறுவுகிற சிலுவைக்கு பகைஞர்கள் ஏராளமாய் பெருகி இருப்பதை இந்நாட்களில் நாம் காண்கிறவர்களாய் இருக்கிறோம். சபையை இடிக்கிற நொறுக்குகிற ஜனங்கள் பெருகிவிட்டார்கள். ஊழியக்கார்களை துன்புறுத்துகிறவர்களும் பெருகிவிடர்கள். இவர்களெல்லாரும் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள் என்று வேதம் அழைக்கிறது.

ஆகையால் தான் பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது, சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (1 கொரி 1:18) என்பதாக சொல்லுவார். கிறிஸ்துவின் சிலுவையை நினைவுகூருகிற இந்நாட்களில் நாமெல்லாரும் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களாயிராமல், நண்பர்களாய், சகோதர சகோதரிகளாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்களாய் இல்லாத நமக்கு கர்த்தர் கொடுக்கும் வார்த்தை நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் (பிலி 3:20,21) என்று கூறுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org