இயேசு உங்களுக்கு மாதிரியைப்  பின்வைத்துப்போனார் (Jesus sets an example for us to follow).

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள், ஏனெனில்,    கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு,    நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்(1 பேதுரு 2:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SLc9qCBHDzE

இயேசு இந்த பூமியில் மனுஷகுமாரனாய் வந்ததின் நோக்கம் பலவாய் காணப்பட்டாலும்,    அவற்றில் முக்கியமான ஒன்று அவரைப் பின்பற்றுகிறவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியை வைத்துப்போவதற்காகவும் காணப்படுகிறது. அவருடைய வாழ்க்கையும்,    வார்த்தையும் நமக்கு மாதிரியாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் அவர் விட்டுச் சென்ற மாதிரியைப் பின்பற்றி ஜீவிப்பதுதான் ஜெயமுள்ள கிறிஸ்தவ ஜீவியமாகும். நோவா கர்த்தர் கொடுத்த மாதிரியின்படி பேழையைக் கட்டினதினால் வெள்ளம் பூமியை சூழ்ந்த வேளையிலும்,    அது வெள்ளத்தின் மேல் உயர்ந்து நின்றது.  ஆசரிப்புக் கூடாரமும் கர்த்தர் கொடுத்த மாதிரியின் படி மோசே கட்டினதினால்தான் தேவ மகிமை மகாபரிசுத்த ஸ்தலத்தை நிறைத்து வைத்திருந்தது. தாவீற்கு கர்த்தர் கொடுத்த மாதிரியின்படி,    சாலொமோன் ஆலயத்தைக் கட்டி எழுப்பினதினால்தான்,    அதின் பிரதிஷ்டையின் நாளில் ஆசாரியர்கள் கூட நிற்கமுடியாத அளவிற்குக் கர்த்தருடைய பிரசன்னம் ஆலயத்தை நிரப்பினது. திருமண வாழ்க்கை கூட தேவன் கற்றுக்கொடுத்த மாதிரியின்படி கட்டி எழுப்பும் போது ஆசீர்வாதமாகக் காணப்படும். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல,    ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று சொல்லி,    ஆதாமுக்கு ஏவாளை ஏற்ற துணையாகக் கர்த்தர் கொடுத்தார். உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஏற்ற வாழ்க்கைத் துணையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் உங்கள் குடும்ப வாழ்க்கை சமாதானமுள்ளதாய் காணப்படும். அப்போஸ்தலர்கள் விட்டுச் சென்ற மாதிரியின்படி ஊழியங்களையும் சபைகளையும் கட்டும் போது,    அது ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரும்.


கர்த்தருடைய பிள்ளைகளே,    நீங்கள் அழைக்கப்பட்டதின் நோக்கம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக என்பதை மறந்து போகாதிருங்கள். கர்த்தருடைய ஆவியானவரும்,    கிறிஸ்துவின் சாயலை,    வசனமாகிய கண்ணாடியின் மூலம் நமக்கு காண்பித்து,    அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து நம்மை மறுரூபப்படுத்துகிறார். உலகம் ஒரு மாதிரியை உங்களுக்குக் காட்டுகிறது,    உலகத்தின் அதிபதியாகிய பொல்லா பிசாசு ஒரு மாதிரியைக் காட்டுகிறான். புறஜாதிகளாய் காணப்படுகிற உலகத்தின குடிகள் ஒரு மாதிரியைக் காட்டுகிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு,    பெயரளவில் காணப்படுகிறவர்களும் ஒரு மாதிரியைக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாய் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுங்கள். பரிசுத்தமாய் ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை உங்களில் இருக்கட்டும். அவர் வாழ்ந்த எளிமையின் வாழ்க்கை வாழுங்கள். அவருக்குள்ளிருந்த தாழ்மை நம்மில் இருக்கட்டும். மத்தியவானில் கிறிஸ்து வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால்,    அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். ஆகையால் ஒருநாளும் இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷத்தைத் தரித்து விடாதிருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae