இயேசு நம்முடைய சமாதான பலி(Jesus is our peace offering).

ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று,     மாட்டு மந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில்,     அது காளையானாலும் சரி,     பசுவானாலும் சரி,     பழுதற்றிருப்பதை  கர்த்தருடைய ச ந்நிதியில் செலுத்தக்கடவன்(லேவி. 3:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ll9VxgkVK34

லேவியராகமம் ஒன்று முதல் ஏழு அதிகாரங்களில் ஐந்து விதமான பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகளில் மூன்றாவது பலி சமாதான பலியாகும். இதற்கு ஐக்கியப்படுத்தும் பலி (Fellowship Offering) என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்த ஒரு பலிப்பொருள்  மட்டும்  மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி தேவனுக்காகப்  பலியாக தகனிக்கப்படும். இன்னொரு பகுதி  ஆசாரியனையும் அவன் வீட்டாருக்கும் உரியது. மன்றொரு பகுதி பலியைக் கொண்டு வந்து தேவனைத் தொழுதுகொள்ளுகிறவருக்கு உரியது. இதிலிருந்து சமாதான பலியானது தேவனோடு மனிதனைச்  சமாதானமாக்கி  ஐக்கியப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும். 

கல்வாரிச் சிலுவையில் இயேசு,     நம்மைத்  தேவனோடு  ஐக்கியப்படுத்தும் படிக்குச் சமாதான பலியாகத் தொங்கினார். அவர் சிலுவையில்  சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,     பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார் என்று கொலோ. 1:20,    21ல் எழுதப்பட்டிருக்கிறது.  முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்  கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில்,     அவரே நம்முடைய சமாதான காரணராகி,     இருதிறத்தாரையும் ஒன்றாக்கி,     பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,      சட்டதிட்டங்களாகிய  நியாயப்பிரமாணத்தைத்  தம்முடைய  மாம்சத்தினாலே ஒழித்து,     இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து,     இப்படிச் சமாதானம் பண்ணி,      பகையைச் சிலுவையினால் கொன்று,     அதனாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்றும் வேதம் கூறுகிறது. அப்போஸ்தலர்களும் இந்த ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்று,     தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று ஜனங்களுக்கு ஆலோசனைச் சொல்லி ஒப்புரவாக்குதலின் உபதேசத்தைச் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் நீதியினால் மட்டும் நாம் எப்பொழுதும் தைரியமாக  கிருபாசனத்தண்டை நெருங்கி,     பிதாவாகிய தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கிறோம். இப்போது நாம் தேவனுக்குத் தூரமானவர்கள் அல்ல,     அவரோடு ஐக்கியமாய் காணப்படுகிறவர்கள். அவருடைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும்  சுதந்தரவாளிகளாய் காணப்படுகிறோம். அதுபோல,     இயேசு சிலுவையில் சிந்தின இரத்தம் அவருடைய ஜனங்களாகிய நம்மை ஐக்கியப்படுத்துகிறது.  நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற  அப்பம் கிறிஸ்துவினுடைய  சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?  அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாம்  பங்குபெறுகிறபடியால்,     அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம் என்று 1 கொரி. 10:16,    17 கூறுகிறது. சத்துரு பலவிதங்களில் ஜனங்களைப்  பிரிக்க  முயல்கிற இந்நாட்களில்,     இயேசுவின் இரத்தம் நம்மை ஐக்கியப்படுத்துகிறது. சபைகளில் பலவிதமான முறுமுறுப்புகள்,     பேதங்கள்,     காழ்ப்புணர்ச்சிகள் என்று பலவிதமான பிரிவினைகளைப் பொல்லாங்கன்; விதைத்து மந்தையைச்  சிதறடிக்க  முயன்றாலும் இயேசுவின் இரத்தம் நம்மை ஐக்கியப்படுத்துகிறது,     ஒரு சேனையாய் நிற்கும் படிக்கு உதவி செய்கிறது. சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்யும் போது,     கர்த்தர் அங்கு என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவார்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae