விசேஷித்த பஸ்கா (A special Passover).

2 இராஜா 23:22 இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cwN2YNXnggI

இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழு நாளளவும் ஆசரித்தார்கள். பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து தங்களை பரிசுத்தம்பண்ணிக்கொள்ள இஸ்ரவேல் ஜனங்கள் இந்த பண்டிகையை ஆசாரிப்பார்கள். சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.

இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. ஏன் இந்த பஸ்கா அவ்வளவு விசேஷித்தது? காரணம் வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான். மாத்திரமல்ல, தேவனுடைய ஆலய விசாரணைக்காரர்கள் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள். லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

இப்படியாக அநேக ஆடுகளையும், காளைகளையும் பலிசெலுத்தி தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள். எஸ்றாவின் காலத்திலும் ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள் (எஸ்றா 6:20).

பழைய ஏற்பாடு காலத்தில் இப்படி அநேகமாயிரம் ஆடுகளை இஸ்ரவேல் ஜனங்கள் பலிசெலுத்தி தங்களை பரிசுத்தம்பண்ணி கொண்டார்கள். ஆனால் நமக்கோ, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக ஒரே தரம் பலியிடப்பட்டிருக்கிறார். நம்முடைய பாவங்களை கழுவி நம்மை பரிசுத்தம்பண்ண நகர வாசலுக்கு புறம்பே ஒரு ஆட்டுக்குட்டியை அடிப்பதைப்போல அவர் அடிக்கப்பட்டார். இன்று கிறிஸ்துவே நம்முடைய பஸ்கா.

பிலாத்து சொன்னான் பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் பரபாசை விடுதலைபண்ணும் என்று சத்தமிட்டார்கள். பரபாஸ் என்பவன் ஒன்றும் நீதிமான் இல்லை; அவன் ஒரு கள்ளன். அந்த கள்ளனை விடுதலை செய்து இயேசுவை சிலுவையிலறையும்படி எல்லாரும் சொன்னார்கள். கடைசியில் இயேசு பஸ்கா பண்டிகையில் நமக்காக அடிக்கப்பட்டு ஒரே தரம் பலியானார்; நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். இதுவே விசேஷித்த பஸ்கா.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org