காலத்தை அறியுங்கள்  (Understand the season).

ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்,    காட்டுப்புறாவும்,    கொக்கும்,    தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்,    என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்(எரே. 8:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jxRrK9PAeb4

கர்த்தருடைய ஜனங்கள் காலத்தை அறிந்து ஜீவிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். சில வேளைகளில் அவர்,     ஐந்தறிவு உள்ள ஜீவிகளை வைத்து,    தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட  நமக்கு ஆவிக்குரிய பாடங்களை கற்றுத் தருகிறார்.  எறும்பிடத்தில்  போய்,    அதின் வழிகளைப் பார்த்து,    ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும்,    தலைவனும்,    அதிகாரியும் இல்லாதிருந்தும்,    கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து,    அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும் என்றார். மிகச்சிறிய சிருஷ்டியாகிய எறும்பு கூட காலத்தை அறிந்து அதற்கு ஏற்றபடி செயல்படுகிறது. மழைக்காலம் வருவதற்கு முன்பு கோடைக்காலத்தில் தனக்கு வேண்டிய ஆகாரத்தைச் சேர்த்து வைக்கிறது. மாடு தன் எஜமானையும்,    கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்,    ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாமலும்,    உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்று ஏசாயா 1:3ல் கர்த்தர் கூறினார். இயேசுவைக் குறித்த அறிவும்,    உணர்வும் இல்லாமல் ஜீவிக்கிற கிறிஸ்தவர்கள் இந்நாட்களில் அனேகம். அவருடைய சாயலைத் தரிக்காமலும்,    சிந்தையை அணியாமலும் வாழுகிறவர்கள் திரளாய் காணப்படுகிறார்கள். சாதாரண மிருகங்களுக்கு இருக்கிற அறிவுகூட தன்னைக் குறித்து தன் ஜனங்களுக்கு இல்லையே என்பது கர்த்தருடைய ஆதங்கமாய் காணப்படுகிறது. ஆகாயத்திலுள்ள நாரை   தன் வேளையை அறியும்,    காட்டுப்புறாவும்,    கொக்கும்,    தகைவிலான் குருவிகள் போன்ற பறவைகள் கூட வேளையையும்,    காலத்தையும் அறிகிறது,    ஆனால் அவருடைய ஜனங்களுக்கு அந்த ஞானம் இல்லை.

கர்த்தருடைய பிள்ளைகளே,    காலத்தை அறிந்து செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு.  அதினதின்  காரியங்களைக்  கர்த்தர் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். அவரைப் போல அவருடைய பிள்ளைகளாகிய நாமும் காலத்தை அறிந்து செயல்பட நம்மை அர்ப்பணிப்போம். காலத்தையும்,    சமயத்தையும் தவறவிட்டால் அவை திரும்பக் கிடைப்பதில்லை. கர்த்தருக்காகச் செய்ய வேண்டிய காரியங்களை அந்தந்த காலங்களில் செய்து முடிப்போம்.  கடைசி நாட்களில்  நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் இருதயங்கள்,    உலகக் கவலைகளினாலும்,    ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும்  பாரமடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆண்டவருடைய வருகைக்கு முன்பு எப்படியாயினும் சிலரையாகிலும் அக்கினிக் கடலிருந்து  தப்புவிக்க கர்த்தருடைய சுவிசேஷத்தை கொண்டு செல்லுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிற பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய ராஜ்ய விரிவாக்கத்திற்காக தாராளமாய் விதையுங்கள். திருடனைப் போல நினையாத நேரத்தில் கர்த்தருடைய வருகைக் காணப்படும். அவருக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாய் காணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae