நீ சுகமாயிருக்கிறாயா? (Is it well with you?).

2 இராஜா 4:26. நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொன்னாள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IGrY_k9mpmQ

சூனேம் என்னும் ஊரில் ஒரு கனம்பொருந்திய ஒரு ஸ்த்ரீ இருந்தாள். அவள் நல்ல வசதியுடன், கனத்துடன் வாழ்ந்து வந்தாள். எலிசா தீர்க்கதரிசி அவள் இருக்கும் ஊருக்கு சென்றபோது, போஜனம்பண்ணும்படி அவள் வருந்திகேட்டதினிமித்தம், எலிசா, அவளோடும் அவள் கணவனோடும் போஜனம் பண்ணினான். அப்பொழுது அந்த ஸ்த்ரீ, எலிசா ஒரு பரிசுத்தவான் என்று கண்டுகொண்டாள். அதற்கு முன் எலிசா தீர்க்கதரிசியின் பிரசங்கத்தை அவள் கேட்டதில்லை, அவனுடைய ஜெப வாழ்க்கை எப்படிப்பட்டது என்றும் அவள் அறிந்ததில்லை. ஆனாலும் எலிசா போஜனம் பண்ணும்போது, அவனுடைய பழக்கவழக்கங்கள், பேசும் முறை, பார்க்கும் விதம், சாப்பிடும் முறையை பார்த்து அவன் பரிசுத்தவன் என்று அவள் கண்டுகொண்டாள். இதுபோலத்தான், நம்முடைய பழக்கவழக்கங்களை பார்த்து, மற்றவர்கள் நம்மை பரிசுத்தவான்கள் என்று சாட்சிகொடுக்க வேண்டும். அவள் மிகவும் வசதியுடன் வாழ்ந்து வந்தாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை எலிசா அறிந்து, கருத்துடன் அவளுக்காக ஜெபம் செய்து, ஒரு வருடத்தில் அவள் கர்பந்தரித்து குழந்தை பெறும்படி கர்த்தர் செய்தார்.

அந்த பிள்ளை வளர்ந்து, கொஞ்ச நாட்களில் மரித்துப்போனது. அந்த வேளையில், சூனேம் ஊராளாகிய ஸ்திரீயின் விசுவாசம் பெரியதாய் இருந்தது. பிள்ளை மரித்தவுடன், பிள்ளையை அவள் அடக்கம்பண்ணவில்லை. மாறாக, எலிசா தீர்க்கதரிசியினிடத்தில் அவள் ஓடுகிறாள். அந்த ஸ்த்ரீ ஓடிவருகிறதை தூரத்தில் கண்ட எலிசா, அவளுடைய சுக செய்தியை விசாரிக்கிறான். நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று தன் வேலைக்காரன் கேயாசி மூலம் விசாரிக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாமாக இருந்தால் என்ன சொல்லிருப்போம்?. பெற்ற குழந்தை மரித்தபோது, நீ நல்ல இருக்கிறாயா? என்று கேட்டால், நாம் மனம் கசந்து அழுதிருப்போம், வியாகுலபட்டிருப்போம். நாகோமியை போல இனி என்னை நகோமி என்று அழைக்காமல் என்னை மாரா என்று அழையுங்கள்; காரணம் கர்த்தர் என் வாழ்க்கையில் கசப்பை கட்டளையிட்டார் என்று சொல்லியிருப்போம். யோபுவின் மனைவியை போல நீ ஆராதாகிற தேவனை தூஷித்து ஜீவனை விடவேண்டும் என்று சொல்லி இருப்போம். ஆனால் தன் மகனை இழந்த, இந்த கனம் பொருந்திய ஸ்திரீயின் வாயில் இருந்து வந்த பதில் விசுவாச பதில். தன் பிள்ளை மரித்தபோது அவள் விசுவாசத்துடன் சொல்லுகிறாள், நான் சுகமாய் இருக்கிறேன் என்பதாக. அதன் பின்பு எலிசா ஜெபித்தத்தின் மூலம், மரித்த பிள்ளை உயிரோடு எழுந்தது. விசுவாசத்தின் படி ஆசிர்வதிக்கிறவர், அந்த மகனை உயிரோடு எழுப்பினார். விசுவாசத்துடன் செயல்பட்ட அவளும் விசுவாச வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டாள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள் (எபி 11:35) என்று வசனம் கூறுகிறது.

அந்த ஸ்த்ரீக்கு இருந்த விசுவாசம் எல்லாருக்கும் இருக்கட்டும். பாடுகள், உபத்திரவத்தில் உங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். சுகத்துடன், கண்ணின் மணியை போல பாதுகாக்கிறவர், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பார். இழந்து போன மகனை திரும்ப பெற்ற சூனேம் ஊரை சேர்ந்த அந்த ஸ்திரீயை போல, நீங்களும் இழந்து போன ஆசீர்வாதம், இழந்துபோன வேலை, இழந்துபோன செல்வம் எல்லாவற்றையும் திரும்ப பெற்றுகொள்ளுவீர்கள் என்ற விசுவாசத்துடன் சொல்லுங்கள் நான் சுகமாய் இருக்கிறேன் என்று.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org