ஆவிக்குரியவர்களும்,    மாம்சத்திற்குரியவர்களும்  (Spiritual and carnal christians ).

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால்,    நீங்கள்  மாம்சத்துக்குரியவர்களாயிருந்து  மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? (1 கொரி. 3:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7mNdmFy-4-0

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது மூன்று விதமான மனிதர்களைக் குறித்து எழுதுகிறார். முதலாவது மனிதன் ஜென்ம சுபாவத்தின் மனுஷன்,    இந்தக் கூட்டத்தைச்  சேர்ந்தவர்கள் இந்நாட்களிலும் திரளாய் சபைகளில் காணப்படுகிறார்கள். இவர்கள் தேவனுடைய  ஆவிக்குரியவற்றை ஏ ற்றுக்கொள்வதில்லை,    அவைகள் அவர்களுக்குப் பைத்தியமாகத் தோன்றும்,    அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து  நிதானிக்கப்படுகிறவைகளானதால்,    அவைகளை  அறியமாட்டார்கள்  என்று 1 கொரி. 2:14ல் எழுதப்பட்டிருக்கிறது. சில பாரம்பரிய சபைகளில் காணப்படுகிறவர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களில்  விருப்பம்  இருப்பதில்லை,    அவைகளை ஏற்றுக்கொள்ளவுமாட்டார்கள். ஞானஸ்நானம்,    அபிஷேகம் என்றால் அவர்களுக்கு வெறுப்பாய் காணப்படும். கர்த்தருடைய வருகையைக் குறித்த நாட்டமும் அவர்களுக்குள் இருப்பதில்லை. 

இரண்டாவது மனிதன் ஆவிக்குரியவன்,    அவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான் (1 கொரி. 2:15). இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவிக்குரியக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேதத்தை எழுத்தின் படியல்ல,    அதின் ஆவியின்படி அறிந்து கொள்ள முயல்வார்கள். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே முக்கியம் என்பதையறிந்து கர்த்தருடைய  வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள். தேவனுக்குப் பயந்த ஜீவியம் செய்வார்கள்,    பரிசுத்தத்தைக் குறித்த பயபக்தி அவர்களுக்குள் எப்பொழுதும் காணப்படும். வசனத்தில் இயேசுவின் சாயலைக்கண்டு,    தங்களில் காணப்படுகிற குறைகளை பரிசுத்தாவியின் துணைக் கொண்டு அகற்றி,    அந்த சாயலுக்கு ஒப்பாக மாறுவதற்கு அனுதினமும் பிரயாசப்படுவார்கள். 

மூன்றாவது  மனிதன்  மாம்சத்திற்குரியவன். இந்தக்  கூட்டத்தை  சேர்ந்தவர்களுக்குக் கர்த்தருடைய காரியங்கள் எல்லாம் தெரியும். ஆண்டவருக்குப் பிரியமானது என்ன என்பதையும் அறிந்தவர்கள். வசனம் எதைப் போதிக்கிறது என்பதும் தெரியும். ஜீவனுக்குப் போகிற வழியையும்,    வாசலையும் அறிந்தவர்கள். ஒழுங்காக ஆலயத்திற்கும் வருவார்கள். ஆனால் இருநினைவுகளினால்  குந்திக்குந்திக் காணப்படுகிறவர்கள். அனலும் இல்லாமல் குளிருமில்லாமல் வெதுவெதுப்பாய் காணப்படுவார்கள். பொறாமையும்,    வாக்குவாதமும்,    பிரிவினைப் பேதகங்களும் இவர்களுக்குள் காணப்படும். பல வருடங்களாய் சபைகளிலிருந்து போதனைகளைக் கேட்டாலும் வாழ்க்கையிலும் சுபாவங்களிலும் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்படுவார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கூட்டங்களில் நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாய் காணப்படுகிறீர்கள். ஜென்ம சுபாவத்திற்குரியவர்களும்,    மாம்சத்திற்குரியவர்களும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை. மாம்சசிந்தை மரணம்,    ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாய் காணப்படுகிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள்  தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,    நீங்கள்  மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல்  ஆவிக்குப்பட்டவர்களாயிருப்பீர்கள்,    ஆகையால் ஆவிக்குரிய ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae