அதிகம் கொடுக்கப்படுகிறவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்(To whom much is given much is required):-

லுக் 12:48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/inkg0YsFJos

லேவியராகமம் 4ம் அதிகாரத்தில் பாவ நிவாரண பலியை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக அறியாமையினால் மீறி செய்த பாவம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆசாரியன், இஸ்ரவேல் சபையார், பிரபு மற்றும் சாதாரண மனிதனின் பாவ நிவாரண பலியை லேவி 4:2,13,22,27 வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். இதிலே சற்று கவனத்துடன் பார்க்கக்கூடிய விஷயம் என்னவென்று பார்த்தால்; ஒரு ஆசாரியன் பாவம் செய்தால் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து பலி செலுத்தவேண்டும். காளை மிகவும் விலை உயர்ந்தது. காளையை வாங்குவதற்கு அதிக பணம் செலுத்தி வாங்கவேண்டும். ஆனால் ஒரு சாதாரண மனிதன் பாவம் செய்து அதற்கு பாவநிவரான பலி செலுத்தவேண்டுமென்றால் அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியை, பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டு வரவேண்டும். பழுதற்ற பெண்குட்டி விலை உயர்ந்தது இல்லை. குறைந்த பண செலவில் அதை வாங்கிவிடலாம். பாவம் செய்த ஆசாரியனுக்கும், சாதாரண மனிதருக்கும் செலுத்தப்படவேண்டிய நிவாரணத்தின் வித்தியாசத்தை பார்க்கும்போது அதிகம் பெற்றவன் அதிகம் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக்கொள்ள முடிகிறது.

மாத்திரமல்ல முழு இஸ்ரவேல் சபையாரும் பாவம் செய்தால், அதற்கு செலுத்தவேண்டிய பாவநிவரான பலி என்ன என்று பார்த்தால் அதுவும் காளையாக காணப்படுகிறது. ஒரு ஆசாரியன், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன், கர்த்தருடைய ஊழியம் சிறியதோ பெரியதோ செய்கிறவன், கர்த்தருடைய வார்த்தை சுமந்து செல்கிறவன் செய்கிற பாவம், முழு சபையும் செய்கிற பாவத்திற்கு சமமாய் காணப்படுகிறது.

ஆகையால் கர்த்தருடைய வார்த்தையை இந்நாட்கள் வரைக்கும் அறிந்து, பரம கானானை குறித்து தெளிவை அடைந்த பிறகு, ஆவிக்குரிய வரங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட பிறகு, அநேகருக்கு உபாத்தியக்காரர்களாக விளங்கியபிறகு, நீங்கள் பாவம் செய்வீர்களென்றால் உங்களிடத்தில் அதிகம் கணக்கு கேட்கப்படும். காரணம் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்கும் என்று வசனம் சொல்லுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அபிஷேகத்தை ஊதாசீனப்படுத்தி இயேசுவை அவமானப்படுத்திட வேண்டாம். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது ( 1 கொரி 4:20) என்று வசனம் சொல்லுகிறது.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org