நாற்பது நாள் (Fourty Days).

மத் 4 :1,2 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/c2ASiFwp1Ss

இயேசுவின் பாடுகளையும், சிலுவையையும் நினைத்து அநேகர் நாற்பது நாள்கள் உபவாசம் இருப்பது உண்டு. வேதத்தின்படி நாற்பது நாள் உபவாசிக்கலாமா வேண்டாமா என்று அநேகர் கேள்வி கேட்பதுண்டு. நாட்களை விசேஷித்துக்கொள்ளுங்கள் என்ற வசனத்தின்படி நாற்பது நாளோ, பத்து நாளோ இல்லை நூறு நாளோ உபவாசம் இருந்து இயேசுவின் பாடுகளை நினைவுகூருவது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தது.

வேதாகமத்தில் நாற்பது என்ற வார்த்தை அநேக இடங்களில் வருகிறது. நோவாவின் காலத்தில் நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. கர்த்தரிடம் நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் பெற்றுக்கொள்ள, மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். மோசே இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களினிமித்தம் ஜனங்களை பார்த்து சொல்லுவான், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை என்பதாக. குற்றவாளியை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம் என்று உபா 25:3 கூறுகிறது. கானான் தேசத்தை வேவு பார்த்துவிட்டு வரும்படியாக மோசே ஜனங்களை அனுப்பியபோது அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். பெலிஸ்தியானாகிய கோலியாத்து காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து இஸ்ரவேலை களங்கப்பண்ணின பிறகு தாவீது அவனை வீழ்த்தினான். எலியா அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான். யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும் என்று ஆண்டவர் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் சொன்னார். இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று யோனா தீர்க்கதரிசனம் உரைத்தான். பவுல் சொல்லுவார் யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன் என்பதாக. இப்படியாக இயேசுவும் நாற்பது நாள் வனாந்திரத்தில் சோதிக்கப்பட்டார்.

இந்நாட்களில் சிலுவையை அதிகமாய் தியானியுங்கள். அடிக்கப்பட்ட கன்மலையாகிய இயேசுவை தியானியுங்கள். சிலுவையில் இயேசு பேசிய ஏழு வார்த்தைகளை தியானியுங்கள். பவுல் சொல்லுகிறார் சிலுவையிலறையப்பட்ட இயேசுவையேயன்றி வேறென்றையும் குறித்து நான் பிரசங்கிப்பதில்லை என்பதாக. மார்ட்டின் லூதர் என்ற தேவ மனிதர் சொன்னார் சிலுவையோடு சம்பந்தப்படுத்தாவிடில் வேதாகமத்தில் ஒரு வார்த்தைகூட புரியாது என்பதாக. C H ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதர் சொன்னார் சிலுவையைப்போல் பிசாசுக்கு கோபமூட்டுவது வேறொன்றுமில்லை என்பதாக. சிலுவையிலறையப்பட்ட இயேசுவை தியானிக்கிற இந்நாட்களில், சிலுவையில் ஆண்டவர் சம்பாதித்த அனைத்து ஆசீர்வாதங்களையும் நீங்கள் சுதந்தரிப்பீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பாவத்திலிருந்து விடுதலை, நோயிலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்று அனைத்து காரியங்களிலும் கர்த்தர் உங்களுக்கு விடுதலையை தருவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org