தாலந்தை பயன்படுத்துங்கள் (Use your talents).

மத் 25:24,25. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/096MnwngoZ0

மத் 25:13-30 வரை உள்ள வசனங்களில் கர்த்தர் கொடுத்த தாலந்துகளை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஐந்து தாலந்தை உடையவனும், இரண்டு தாலந்தை உடையவனும் வியாபாரம் பண்ணி, உண்மையுள்ளவர்களாய் அதை பயன்படுத்தினார்கள். அவர்கள் எஜமானின் சந்தோசத்திற்குள் பிரவேசித்தார்கள். ஒரு தாலந்தை பெற்றவனோ, எஜமான் கொடுத்ததை சிறிதேனும் உண்மையாக பயன்படுத்தாமல் மண்ணுக்குள் புதைத்துவைத்து விட்டான். இப்படித்தான் அநேகர் கர்த்தர் கொடுத்த தங்கள் தாலந்தை மண்ணுக்குரிய வாழ்விற்காக செலவழித்து வீணாக்கி போடுகிறார்கள். கர்த்தர் கொடுத்த தாலந்தை தன் எஜமானாகிய கர்த்தருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பயன்படுத்தாமல், உலக மேன்மைக்காகவே அதை பயன்படுத்தி, அவர்களுடைய வாழ்வு பூமிக்கு அடியில் புதைந்து அழியும் வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலருக்கு ஆண்டவர் நல்ல பாடல் பாடும் தாலந்தும், இசைக்கருவிகளை வாசிக்கும் தாலந்தையும் கொடுத்தும் அதை சபைகளில் பயன்படுத்தாமல், உலகத்துக்குரிய காரியங்களுக்காகவும், சினிமாவுக்காகவும் பயன்படுத்துகிற திரளான ஜனங்கள் உண்டு. அவர்களெல்லாம் கர்த்தர் கொடுத்த தங்கள் தாலந்தை மண்ணுக்குரிய, நிலையில்லாத காரியங்களில் புதைத்துவிடுகிறார்கள்.

அதுபோலவே கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பணத்தையும் வீணாக மண்ணிற்கு போய்விடாதபடி சேர்த்துவைத்து பழக வேண்டும். இயேசு மீதியான துணிக்கைகளை சேர்த்துவையுங்கள் (யோவா 6:12) என்று தன் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். கர்த்தர் கொடுக்கும் வருமானத்தில் வீணாக குடிபோதையை வாங்குவதிலோ, அளவுக்கு அதிகமான சேலைகளையும், ஆடைகளையும் வாங்குவதிலோ, அளவுக்கு அதிகமாக பணம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிடுவதிலோ செலவழித்து உங்கள் பணத்தை பூமிக்கடியில் புதைத்துவிடாதிருங்கள். மாறாக, கர்த்தர் கொடுக்கிற பணத்தை சேமித்து, ஊழியங்களுக்காக விதையுங்கள். கொஞ்ச பணத்தையும் ஞானமாய் செலவழித்தால், அது தேவனுடைய இராஜ்யத்திற்கு பயன்படும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தாலந்தை வாங்கியவன், ஆண்டவர் கடினமுள்ள மனுஷன் என்று தவறாக புரிந்துகொண்டான். இயேசு நல்ல மேய்ப்பர் என்பதை அறியாமல், அவர் கடினமுள்ளவர் என்று இயேசுவின் சுபாவத்தை தவறாக அறிந்துகொண்டான். நம்முடைய தேவன் கண்டிப்பானவர், நம்முடைய தவறுகளை திருத்துகிறவர்; ஆனால் கடினமுள்ளவர் அல்ல. தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய அன்பின் நீளம் ஆழம் அகலம் உயரத்தை அறிந்தவர்களாக நாம் காணப்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தாலந்தை கொடுப்பவர், சிலருக்கு கர்த்தர் ஒரு தாலந்தை தான் கொடுத்திருக்கிறார் என்று கவலைபடாதிருங்கள். நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே (எபி 13:5) என்ற வசனத்தின்படி உங்களுக்கு இருப்பவைகள் போதுமென்று எண்ணுங்கள். அப்பொழுது அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை அவர் கைவிடுவதுமில்லை. உலகத்தில் எல்லா செல்வமும் கனமும் இருந்தும், தன் வாழ்க்கையில் இயேசு இல்லாதவன் தரித்திரன். உலகத்தில் ஒன்றும் இல்லாமல், தன் வாழ்க்கையில் இயேசுவை உடையவன் ஐஸ்வரியவான். ஆகையால் எவ்வளவு தாலந்து என்பதை பற்றி கவலையில்லாமல், கர்த்தர் கொடுத்த தாலந்தை மண்ணுக்குரிய வாழ்க்கையில் வீணடித்துவிடாமல், விண்ணுகிரிய வாழ்க்கைக்காக பயன்படுத்துங்கள். அப்பொழுது எஜமானின் மகிழ்ச்சிக்குரிய பாத்திரமாக நீங்கள் இருப்பீர்கள். நம்முடைய எஜமானை மகிழ்ச்சிப்படுத்தவதே நம்முடைய நோக்கமாக இருக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org