இயேசு நம்முடைய பாவநிவாரண பலி (Jesus is our sin offering).

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,     ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி,     செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:  அபிஷேகம் பெற்ற ஆசாரியன்,     ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்க தாகப் பாவஞ்செய்தால்,     தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை  பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில்  கொண்டுவரக்கடவன் (லேவி. 4:2,    3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VySF5lrsu2Q

லேவியராகமம் ஒன்று முதல் ஏழு அதிகாரங்களில் ஐந்து விதமான பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகளில் நான்காவது பலி பாவநிவாரண பலியாகும். இஸ்ரவேல் ஜனங்களும் ஆசாரியர்களும் அறியாமையினாலும்;;,     தற்செயலாகவும் செய்த பாவங்களுக்கு நிவாரணமாக இந்த பலி செலுத்தப்படுகிறது. பிரதான ஆசாரியன் தற்செயலாகப் பாவம் செய்யும் போது  இளங்காளையை பலியாகச் செலுத்தவேண்டும்.  ராஜாவும்,     பிரபுவும் அப்படிப்பட்ட பாவம் செய்யும் போது இளம் ஆண் வெள்ளாட்டுக் குட்டியை பலிசெலுத்த வேண்டும். மற்றவர்கள் பெண் வெள்ளாட்டுக் குட்டியைப் பலி செலுத்த வேண்டும்,     ஏழையாயிருந்தால் புறாக்குஞ்சைப் பலியாகச் செலுத்த வேண்டும். கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறவர்கள் அறியாமையினாலும் தவறுதலாகவும் கூட பாவஞ் செய்யாதபடிக்குத் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் செலுத்த வேண்டிய பலியிலிருந்து அறிந்து கொள்ளலாம். பலி செலுத்தப்பட்ட பின்பு,     பலிகளின் மிகுதி பகுதிகளை பாளையத்திற்கு புறம்பே கொண்டு சென்று சுட்டெரிக்க வேண்டும். 

இயேசு கல்வாரிச்  சிலுவையில்  பாவநிவாரணபலியாக நமக்காக அடிக்கப்பட்டார். நாம் அறிந்து செய்த தப்பிதங்களுக்காய் மட்டுமல்ல,     அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் அவர் சிலுவையில் அடிக்கப்பட்டார். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் கூறுகிறது. ஆகையால்,     இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்த தீர்க்கிற தேவாட்டுக் குட்டியாய் கல்வாரிச் சிலுவையில் தொங்கினார்.  அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக  நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் என்று எபிரேயர் 13:12 கூறுகிறது. பாவநிவாரண பலி பாளையத்திற்குப் புறம்பே கொண்டுபோகப்பட்டு எப்படி சுட்டெரிக்க்படுகிறதோ,     இயேசுவும் எருசலேம் என்னும் நகர வாசலுக்குப் புறம்பே கொண்டு போகப்பட்டு கொல்கொதா என்னும் மலையில் சிலுவையில் அடிக்கப்பட்டார்

கர்த்தருடைய பிள்ளைகளே,     நாம் எல்லாரும் அறிந்தும்,     அறியாமலும் அனேக பாவங்களைச் செய்கிறவர்கள்தான். சிலுவையண்டை வந்து இயேசுவே உம்முடைய இரத்தத்தினால் என்னை பாவங்களற கழுவும் என்று சொல்லி நாம் ஜெபிக்கும் போது,     உங்கள் பாவங்கள் இரத்தாம்பர சிகப்பைப் போல் காணப்பட்டாலும் பஞ்சைப் போல வெண்மையாகும் படிக்குச் செய்வார். இயேசு கிறிஸ்துவின்  இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும். பாவங்களை மறைக்கிறவர்களுக்கு வாழ்வு இல்லை,     ஆனால் அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களுக்கு இரக்கம் உண்டு. ஆகையால் இயேசுவின் ரத்தினால் அனுதினமும் கழுவப்படுங்கள்.  ஊழியஞ்செய்கிறவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாகக் காணப்படவேண்டும். கர்த்தர் எவனிடத்தில் அதிகமாய் கொடுக்கிறாரோ,     அவனிடத்தில் அதிகமாய் கணக்கு கேட்கிறவர். ஊழியக்காரனுடைய தவறுகள் ஜனங்களை இடறலடையும்படிக்குச் செய்துவிடும்,     கர்த்தருடைய சத்திய வசனத்தை விட்டு பொய்களுக்கு நேராய் நடத்திவிடும். நித்திய ஜீவனுக்குப் பதிலாக நித்திய அக்கினி கடலுக்கு நேராய் கொண்டுசென்று விடும். ஆகையால் ஊழியம் செய்கிறவர்கள் இன்னும் ஜாக்கிரதையோடு காணப்படவேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae