உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (Crucified to the world).

கலா 6:14. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_PcJHssQbfg

உலகம் என்பதற்கு கிரேக்க பதத்தில் “Kosmos” என்று அர்த்தம். அதாவது பூமி, மனுக்குலம், யூதரல்லாதவர்கள், உலக சிந்தையுள்ளவர்கள், அநித்தியமானவைகள் என்ற பல்வேறு அர்த்தங்கள் உலகம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது.

பவுல் இந்த வசனத்தில் இரண்டு காரியங்களை குறிப்பிடுகிறார். ஒன்று அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது; மற்றொன்று நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.

அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது என்பதன் அர்த்தம் உலகம் ஒருநாளும் என்னை வஞ்சிக்கமுடியாது என்பதாய் காணப்படுகிறது. உலகத்தின் முடிவுக்கும் ஆண்டவருடைய வருகைக்கும் அடையாளம் என்ன என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டபோது, இயேசு சொன்னார், ஒருவரும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாய் இருங்கள் என்பதாக. பேதுரு சொன்னார் மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான் (அப் 2:40) என்பதாக. ஆகையால் உலகத்தால் கறைபடாமல் உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். ஒரு கிறிஸ்தவனிடம் மற்றொருவன் வந்து சொன்னான், யெகோவா தேவன் ஒருவரே தேவன்; இயேசுவும் ஆவியானவரும் நாம் வணங்க கூடியவர்கள் அல்ல என்று வஞ்சிக்க பார்த்தான். அதற்கு அந்த கிறிஸ்தவன் சொன்னான் நான் ஆராதிக்கற தேவன் திரியேக தேவன், நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார் என்று இயேசு சொன்னார். என்னை போல வேறொரு தேற்றவாளனை நான் உங்களுக்கு அனுப்புவேன் என்றும் இயேசு சொன்னார், என்ற வசனங்களை கூறி மற்றவர்களின் வஞ்சனையிலிருந்து தப்பித்துக்கொண்டார். இப்படியாக உலகம் உங்களுக்கு சிலுவையிலறையுண்டதாக காணப்படட்டும்.

அடுத்ததாக பவுல் சொல்லுகிறார் நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் என்பதாக. அதாவது உலகத்திற்கு பின்னால் நான் போக மாட்டேன் என்று பவுல் கூறுகிறார். ஆகையால் தான் Father பெர்க்மான்ஸ் அழகாக பாடியிருப்பார் இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்கமாட்டேன், திரும்பி பார்க்கமாட்டேன்; சிலுவையே முன்னால் உலகமே பின்னால் என்று அவர் பாடியிருப்பார். உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு பின்னால் நான் போகக்கூடாது. இயேசு பாவிகளின் சிநேகிதர் என்று அழைக்கப்பட்டாலும், அவர் பாவிகளுக்கு விலகினவர் (எபி 7:16) என்று வசனம் கூறுகிறது. அதாவது பாவிகளின் சிநேகிதர் என்று இயேசு அழைக்கப்பட்டாலும், பாவிகளிடம் இருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை; மாறாக, பாவிகளே இயேசுவிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள். இயேசுவை சுற்றிலும் இருந்த பாவத்தின் காரியங்கள் ஒன்றும் இயேசுவை தொடமுடியவில்லை. அதற்காக நான் விபச்சாரிகள் இருக்கும் இடத்திலும், குடிகாரர்கள் இருக்கும் இடத்திலும் இருப்பேன் என்று வீரமாக செயல்பட நினைக்க கூடாது. பாவம் செய்யாமல் இருக்க ஒரு வழி, அதற்கு விலகி ஓடுவதே என்பதை யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோம 8:1) என்ற வசனத்தின்படி மாம்சத்தை சிலுவையிலறைய ஒப்புக்கொடுப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org