கிறிஸ்துவின் ஆத்துமா (The soul of Christ).

அப் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/aOIvgKs_oG8

தாவீது தீர்க்கதரிசனமாக சொன்னார், கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லை என்பதாக. தேவன் ஆவியாய் இருக்கிறார். ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு ஆவி ஆத்துமா சரீரம் இருப்பதை போல, இயேசு மனிதனாக இருக்கும்போது ஆவி ஆத்துமா சரீரம் உடையவராய் அவர் காணப்பட்டார். அன்றைய ரோம அதிகாரிகள் இயேசுவின் சரீரத்தை தான் கொலை செய்தார்களே தவிர அவருடைய ஆத்துமாவை கொல்ல முடியவில்லை. ஆகையால் தான் இயேசு சொன்னார் ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10:28) என்பதாக.

மரியாளால் இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்க்கக்கூட முடியாமல் அவளுடைய ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவி சென்றது, அதாவது அவ்வளவு வேதனையை அவள் கடந்துசென்றாள் என்பது உண்மை தான். என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி (மத் 26:38) இயேசு ஜெபித்ததும் உண்மைதான். ஆனால் இயேசுவின் ஆத்துமா பாதாளத்தில் விடப்படவில்லை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர் சொன்னபடியே உயிரோடு எழுந்தார்.

அதுபோல தான் நம்முடைய ஆத்துமாவும் பாதாளத்தில் கடந்து செல்லாமல் இருக்க நம் இருதயத்தை காத்துக்கொள்ள வேண்டும். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார் (லுக் 12:20). மனுஷன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும் அவனுக்கு இலாபம் என்ன என்று வேதம் கேட்கிறது. ஆகையால் உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் (லூக் 21:19). நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள் (யாக் 1:21). சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக (I தெச 5:23) என்று வசனம் கூறுகிறது.

அதுமாத்திரமல்ல, மற்ற ஆத்துமாக்களுக்காகவும் பரிதாபியுங்கள். ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் என்று பவுல் கொரிந்து சபைக்கு எழுதினதுபோல ஆத்துமாக்களுக்காக செலவு செய்ய தயங்காதிருங்கள். சபையாய் இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து செயல்பட முன்வாருங்கள். தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன் (யாக் 5:20) என்ற வசனத்தின்படி அழிந்துபோகும் ஆத்துமாக்களை இரட்சிக்க பிரயாசப்படுங்கள்.

அப்பொழுது இயேசுவின் ஆத்துமா பாதாளத்தில் விடாமல் காக்கப்பட்டது போல நம்முடைய ஆத்துமாவும் பாதாளத்திற்கு செல்லாமல் காக்கப்படும். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோ 1:2) என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவும் சுகமாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org