நீங்கள் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள் (You are Christ’s ambassadors).

2 கொரி 5:20. ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kYzb9_uQMN8

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக பல்வேறு நாடுகளில் பிரதிநிதிகளை நியமிப்பதுண்டு. சாதாரண பின்தங்கிய நாட்டின் பிரதிநிதி கூட தங்களுடைய நாட்டின் கண்ணியத்தை பொறுப்புடன் கவனிப்பார்கள். இந்த உலகின் பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா நாட்டின் பிரிதிநிதி இந்திய தேசத்தில் இருக்கிறார்கள். அந்த நாட்டின் பிரதிநிதி இந்திய நாட்டிடம் கடன் கேட்பதில்லை, கையேந்துவதில்லை. இந்த உலகத்தின் வல்லரசு நாட்டின் பிரதிநிதியே, மற்றவர்களிடம் கையேந்தாமல் இருப்பார்களென்றால், நாமெல்லாரும் பரலோக இராஜ்யத்தையும், அண்ட சராசரங்களில் காணப்படுகிற அனைத்தையும் ஆளுகை செய்கிற கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாய் இருக்கும்போது, இயேசு நமக்கு குறையை வைப்பாரா? ஒருநாளும் நீங்கள் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாய் இருக்கும்போது, மற்றவர்களிடம் கையேந்துவதை, கர்த்தர் அனுமதிப்பதில்லை.

ஒரு நாட்டின் ஸ்தானாபதி, ஒவ்வொருநாளும் தன்னுடைய தாய் நாட்டிற்காக வேலை செய்வார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய தாய் நாட்டோடு தொடர்புடன் காணப்படுவார். அதுபோல தான், கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாகிய நாம், ஒவ்வொருநாளும் கிறிஸ்துவுக்காக வேலை செய்ய வேண்டும். கிறிஸ்துவோடு கூட எப்பொழுதும் தொடர்பில் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கிறிஸ்துவின் ஸ்தானாபதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளுகிற பவுலின் பின்னணியையும், குணாதிசியத்தையும் 2 கொரிந்தியரில் பாருங்கள். அவன் தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டவன் (1:1); கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்துகொண்டவன் (1:12); ஆவியானவரின் அபிஷேகத்தால் நிறைந்து ஆவியென்னும் அச்சாரத்தை பெற்றவன் (1:22); ஊழியம் செய்தவர்களிடம் அன்பாய் இருந்தவன்(2:4); எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, எல்லாவற்றிலும் தேவனையே நம்பி ஜீவித்தவன்(3:5); நெருக்கடிகள் வரும்போது சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்தவன் (4:1); ஊழியம் குற்றப்படாதபடிக்கு எல்லாருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தவன் (6:3); நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை என்று சொல்லி மற்றவர்களுடையதை எடுத்துக்கொள்ளாதவன் (7:2); தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் குற்றப்படுத்தாதபடி, பணத்தை சரியாகவும், உண்மையாகவும் கையாண்டவன்(8:20); தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே ஊழியம் செய்கிறோம் என்று சொல்லி தேவன் போட்ட கோட்டை தாண்டாதவன் (10:13); கிறிஸ்துவுக்காக பாடுகள் பட ஆயத்தமானவன்(11:23-33); கடைசியாக, விசுவாசிகள் நற்சீர்பொருந்தும்படிக்கு ஜெபிக்கிறவன்(13:9). இப்படிப்பட்ட குணாதிசயத்தை உடையவர்களே கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள். நீங்களும் பவுலை போல கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக அழைக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org