மாசில்லாத பக்தி (Undefiled Religion).

யாக் 1:27. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jFRh_bng5Vs

நம்முடைய பக்தி மாசில்லாத சுத்தமான தேவ பக்தியாய் இருந்திட வேண்டும். உலகம் பார்க்கவேண்டும், மனிதர்கள் நம்மை பார்த்து இவன் நன்றாக ஜெபிக்கிறான், நன்றாக அந்நியபாஷை பேசுகிறான், நன்றாக பிரசங்கிக்கிறான், நன்றாக பாடுகிறான் என்று சொல்லுவதை எதிர்பார்த்து செயல்படுவது மாசில்லாத தேவபக்தி அல்ல. இன்று கிறிஸ்துவ உலகில், பாடல்கள் பாடுவதிலும், இசை அமைப்பதிலும், பிரசங்க வழிமுறைகளிலும் உலக ஆவிகளுக்கு இடம்கொடுத்து பக்தி பரவசம் மூட்ட அநேகர் முயற்சிக்கிறார்கள். ஒரு சபையின் பிரசங்கத்தில் அந்நிய வாழிபாடுகளையும் தங்கள் பிரசங்கத்தோடு இணைத்து ஒரு ஊழியக்காரர் பிரசங்கம் செய்தார். இவைகளெல்லாம் உலகத்தால் கறைபட்ட தேவபக்தியாய் காணப்படுகிறது. உலகத்தால் கறைபடாத பக்தி மாத்திரமே மாசில்லாத பக்தி என்று திட்டமாக அப்போஸ்தலனாகிய யாக்கோபு மூலம் ஆவியானவர் எழுதிவைத்திருக்கிறார். தூய்மையான பக்திக்கு விரோதமாக உலகத்து ஜனங்கள் கொடுக்கும் ஆலோசனைக்கும், உலக ஆவிக்கும் இடம்கொடுக்காமல் உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். அந்நிய நுகத்தோடு பிணைக்கப்பட்டு ஆண்டவருக்கு பிரியமில்லாத வகையில் திருமணங்களை செய்துகொள்ளாதிருங்கள். வீடு கட்டி அதை திறக்கும்போதும், திருமணங்களை நடத்தும்போதும், வேறெந்த வீட்டு விசேஷங்களில் உங்கள் பக்தி மாய்மாலமில்லாமல் இருக்கும்படி உறுதிசெய்துகொள்ளுங்கள்.

ஒரு கிறிஸ்துவ குடும்பம் வாரந்தோறும் சபைக்கு வருவார்கள். ஜெப கூட்டங்களில் கலந்துகொள்ளுவார்கள். தங்களுடைய மகளின் விசேஷத்தில், முழுவதுமாக புறஜாதிகளின் வழக்கத்தின்படி அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது மாய்மாலமான தேவ பக்தி. ஒரு சகோதரன் ஒவ்வொரு வாரமும் சபையில் இயேசுவுக்காக அநேக காரியங்களை செய்ய பிரயாசப்படுவான். ஆனால் வாரத்திலிருக்கும் மற்ற நாட்களில் குடியும் போதையுமாக காணப்படுவான். இது மாய்மாலமான தேவ பக்தி. ஒரு சகோதரி நன்றாக அந்நியபாஷை பேசி ஜெபிப்பார்கள், ஆனால் மற்ற நபர்களை பார்த்து புறம் கூறி, இருமணமுள்ளவர்களாய் நடந்துகொள்ளுவார்கள். இது மாய்மாலமான தேவ பக்தி.

இந்த உலகத்திலிருக்கும் காரியங்கள் ஒன்றும் உங்களை கறைபடுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருநாளும் இயேசுவுக்கு ஒத்த சாயலை பெற்றுக்கொள்ள பிரயாசப்படுங்கள். நாமெல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். தவறுகளை சரிசெய்து மாசில்லாத பக்தியோடு நம்முடைய தேவனை தொழுதுகொள்ளுவோம். மாசில்லாத தேவ பக்தியுடன் ஆண்டவரை தொழுதுகொள்ளும்படி அவருடைய பாதத்தில் அமர்ந்து விண்ணப்பத்தை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org