இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வாதம்(An overflowing blessing).

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:10.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oaO10VumecQ

மல்கியா தீர்க்கதரிசியின் புஸ்தகம், புதிய ஏற்பாடுக்கு முன்னோடியாய் காணப்படுகிற பழைய ஏற்பாட்டின் கடைசி புஸ்தகம். யோவான் ஸ்நானகனைப்பற்றி, இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று மல்கியா 3:1-லும், நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.  அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் என்று மல்கியா 4:5,6-லும் எழுதப்பட்டிருப்பதை வாசிக்கிறோம். சுமார் 400 வருட இடைவெளிக்கு பின்பு, அந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் மத்தேயு 11:10,  லூக்கா 1:17-வது வசனங்கள் மூலமாக அப்படியே நிறைவேறினது. அதே மல்கியா புஸ்தகத்தில் தான் தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதை செய்யாததினால், நாம் தேவனை வஞ்சிக்கிறோம் என்று கர்த்தர் கடினமாய் பேசுகிறதை பார்க்கமுடிகிறது. யோவான்ஸ்நானகனைக்குறித்து மல்கியா முன்கூறுவதை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள், தசமபாகத்தைக்குறித்த உபதேசம் புதிய ஏற்பாட்டிற்குரியதல்ல என்று கூறி ஒதுக்கிவிடுகிறோம்.  வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (2 தீமோ-3:16). ஆகையால், நாம் அதை உண்மையாய் செய்தால் கர்த்தர், வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பேன் என்று வாக்களிக்கிறார். உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக என்று உபா. 6:16-ல் கூறின தேவன், இந்தக்காரியத்தில் மாத்திரம் என்னை சோதித்துப்பாருங்கள் என்று சவாலாகச் சொல்லுகிறார்.

விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாம், தனக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்த  உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் என்று எழுதப்பட்டிருப்பதை ஆதி. 14:18-20-ல் வாசிக்கிறோம். இதிலிருந்து நாம் எங்குக் கர்த்தருடைய பரிசுத்த பந்தியில் கலந்து கொண்டு அப்பமும் ரசமும் எடுக்கிறோமோ அங்கு தசமபாக காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும் என்பது புலனாகிறது. மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் (எபிரேயர் 7:9,10) என்று எழுதப்பட்டதிலிருந்து ஊழியம் செய்கிறவர்கள் கூட தங்கள் வருமானத்தில் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்பதைக்குறிக்கிறது. இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கும்படிக்கு வெளிப்பட்டார் (சங்கீதம் 110:4, எபிரேயர் 5:6). ஆகையால்  ஆபிரகாம் மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்தார் என்பது இயேசுவுக்கு கொடுத்ததற்கு  அடையாளமாய் காணப்படுகிறது. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் நமக்கு மாதிரியை வைத்துபோயிருக்கிறார். 

ஏலியின் நாட்களில், மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள் (1 சாமு. 2:17), அதுபோல இந்த கடைசி நாட்களிலும், அனேக ஊழியர்களுடைய, அவர்கள் குடும்பத்தினருடைய, சுகபோக வாழ்க்கையை ஜனங்கள் கண்டு கர்த்தருக்கு கொடுப்பதை வெறுப்பாக எண்ணுகிறார்கள். கிறிஸ்து இயேசுவிலிருநத சிந்தையை இழந்து ஊழியம் செய்வதினால், சாட்சியற்றவர்களாய் காணப்படுவதினால், ஜனங்கள் கொடுப்பதை வெறுக்கிறார்கள். எல்லா சபைகளும், ஊழியங்களும் தங்கள் கணக்குகளை சரியாக, வெளிப்படையாக கையாளவேண்டும். அது விசுவாசிகள் மத்தியில் ஊழியர்களையும், ஊழியங்களையும் குறித்த நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இன்னும் அதிகமாக தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கர்த்தருக்கு கொடுக்க உற்சாகப்படுத்தும்.

கர்த்தருக்காய் கொடுப்பது தேவனுடைய கட்டளை. தேவ ஜனங்கள் அவருக்காக, அவர் கொடுத்ததில் இருந்து எடுத்து கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன் (உபா. 16:17). இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்கு யாத். 25:2-ல் தேவன் கட்டளையிட்டிருக்கிறார். உற்சாக மனதோடு கர்த்தருடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி விதைக்கிறவர்களை,  வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் அவர்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கச் செய்வார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2கொரி. 9:7). வெறுப்போடும், கட்டாயத்தின் பேரிலும் அல்ல, உற்சாகமனதோடு கொடுக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.  இயேசுவின் ஊழியத்தின் நாட்களில், ஒருநாள் தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப்  பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.  அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;  அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப்போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்று, இருதயத்தைப் பார்க்கிற தேவன், அவளுடைய உற்சாக மனதைப் பார்த்து மெச்சினார். கொடுப்பது கர்த்தருடைய வரங்களில், கிருபைகளில் ஒனறாய்  காணப்படுகிறது. மக்கெதோனியா நாட்டுச் சபை  விசுவாசிகளுக்கு தேவன் அந்த கிருபையை அளித்திருந்தார், அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள் (2 கொரி. 8:1,2).  உற்சாக மனதோடும், பரிபூரண சந்தோஷத்தோடும், உதாரத்துவமாய், உங்ககளுக்கு கர்த்தர் கொடுத்த ஆலயத்தில் விதைக்கும்போது, கர்த்தர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

உற்சாக மனதோடு விதையுங்கள். வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் கர்த்தர் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழிந்தருளுவார்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Intrumuthal Ungalai, Uthamiyae, Vol. 5