உயிர்தெழுந்த ஆண்டவரின் முதல் தரிசனம் (The first appearance of risen Lord).

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு,  மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார் (மாற்கு 16:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gWDkymTH4bs

இயேசு உயிர்தெழுந்த பின்பு சுமார் பத்து முறை அனேகருக்குத் தரிசனமானார். அவற்றில் முதல் முதலாக மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார் என் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. ஆண்டவர் தன்னுடைய  சீஷர்களுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு, தன் மார்பில் சாய்ந்து தன்னோடு அன்பாயிருந்த சீஷனுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு மகதலேனா மரியாளுக்கு ஏன் வெளிப்படுத்தினார். அவளுடைய வாழ்க்கையில் இரண்டு பகுதிகள் காணப்படுகிறது. முதல் பகுதி பிசாசு பிடித்தவளாய் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். பிசாசு ஒரு மனுஷனை ஆளுகை செய்யும் போது அந்த நபருடைய வாழ்க்கை பாவத்தினாலும் இச்சையினாலும் நிறைந்ததாய் காணப்படும். அவன் தேசத்தில் அதிகாரம் செலுத்தும் போது, அந்த தேசத்தின் குடிகள் பலவிதமான பாவபழக்க  வழக்கங்களில் காணப்படுவார்கள். இயேசு பரிசேயனுடைய வீட்டில் பந்தியிருந்த வேளையில் அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,  அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப்  பூசினாள் என்று  லூக்கா 7:37,38ல் மகதலேனா மரியாளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த பரிசேயன் இவளுடைய பாவ வாழ்க்கையை அறிந்து தனக்குள்ளே முறுமுறுக்கிறவனாய் காணப்பட்டான். ஆனால் ஆண்டவர் இவள் தன்னிடத்தில் மிகவும் அன்பு கூர்ந்தாள்  என்று சொல்லி அவளை நோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். அந்த நாளிலிருந்து அவளுடைய வாழ்க்கை முழுவதுமாய் மாறினது. அவளுடைய வாழ்க்கையின் இரண்டாவது பகுதி துவங்கினது. நன்றியுள்ள இதயத்தோடு,  தடுமாற்றமில்லாமல்  ஆண்டவரை பின் தொடர்கிறவளாய் காணப்பட்டாள்.

இயேசுவின் சிலுவைப் பாடுகளின் பாதை முழுவதும் மகதலேனா மரியாள் ஆண்டவரோடு காணப்பட்டாள். பேதுரு ஆண்டவரை மறுதலித்தான்,  யூதாஸ் ஆண்டவரை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான். இயேசு பிடிக்கப்பட்ட உடனே எல்லா சீஷர்களும் அவரை தனியே விட்டு ஓடிப்போனார்கள். மாத்திரமல்ல இயேசு உயிர்தெழுவற்குள், அவர் ஏற்கனவே தன் சீஷர்களிடம் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று கூறிய  வார்த்தையின்  படி காத்திருக்காமல் அவர்கள் விட்டு வந்த தொழிலைச் செய்வதற்குப் போய்விட்டார்கள். இரண்டு பேர் பின் மாற்றமடைந்து எம்மாவூர் கிராமத்திற்கு நேராய் கடந்து சென்றார்கள்.  தோமா மற்ற சீஷர்களோடு காணப்பட்ட ஐக்கியத்தை விட்டுவிட்டான். இப்படி மற்றவர்களுக்குள்ளாய் ஆண்டவர் பேரில் கொண்டிருந்த அன்பு தணியத்துவங்கிய வேளையிலும் மகதலேனா மரியாள் ஆண்டவரில் அன்பு கூர்ந்து தொடர்ந்து அவரைத் தேடுகிறவளாய்  காணப்பட்டாள். ஓய்வு நாளின் காலை வேளையில், மற்ற ஸ்தீரிகளோடு  கல்லறையினிடத்திற்கு பரிமள தைலம் பூசும் படிக்கு வந்தாள், ஆனால் ஆண்டவரை வைத்திருந்த கல்லறையின் வாசல் கல் புரட்டப்பட்டிருப்பதையும், அவருடைய சரீரத்தையும் காணாததினால் கலங்கி நின்றாள். மற்ற ஸ்திரீகளும்  சீஷர்களும் கல்லறையை விட்ட கடந்துசென்ற பின்பும் தன் ஆத்தும நேசரைக்குறித்த கவலையோடு கல்லறையண்டை அழுதுகொண்டு நின்றாள். ஆகையால் உயிர்தெழுந்த ஆண்டவர் அவளுக்குத் தரிசனமாகி, அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை  எடுத்துக்கொண்டுபோன துண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள், அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.  அவள் ஆண்டவர் பேரில் கொண்ட அன்பின் நிமித்தமும், அதிகாலையில் அவரைத்  தேடினதிமித்தமும்  உயிர்தெழுந்த ஆண்டவர் அவளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு மரித்தது உண்மை, ஆனால் இப்போதும், சதாகாலமும் உயிரோடிருக்கிறார். யோபு தன் பாடுகளின் மத்தியில் கூட, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று கூறி சாட்சியிட்டான்.  மகதலேனா  மரியாளைப் போல, வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி நிறைந்த இருதயத்தோடு அவரைத் தேடுங்கள். அவரில் அன்பு கூர்ந்து அவரை சேவியுங்கள். கர்த்தர் உங்கள் அழுகையை மாற்றுவார், உங்களை களிகூர்ந்து மகிழும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae