இயேசு    நம்முடைய போஜன பலி (Jesus is our Meal Offering). 

ஒருவன் போஜன பலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால்,    அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக, அவன் அதன்மேல் எண்ணெய் வார்த்து,    அதன்மேல் தூபவர்க்கம் போட்டு,    அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக(லேவி. 2:1,   2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SfLLaXjyO9s

லேவியராகமம்  ஒன்று முதல் ஏழு அதிகாரங்களில் ஐந்து விதமான பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகளில் இரண்டாவது பலி போஜன பலியாகும். ஐந்து பலிகளிலும்,    போஜன பலியில் மட்டும்தான் ரத்தம் சிந்தப்படவில்லை.  மெல்லிய மாவும்,    எண்ணெய்யும்,    ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம்  எல்லாவற்றையும் சேர்த்து கர்த்தருக்குச் சுகந்த வாசனையாக தகனிக்க  வேண்டும்.  கர்த்தருக்குச் செலுத்தப்படுகிற பலிகளில் இது மகா பரிசுத்தமானது என்று லேவி. 2:3,   10ல் எழுதப்பட்டிருக்கிறது. போஜன பலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். போஜன பலி,    பாவநிவிர்த்திக்கு என்று செலுத்தப்படுகிற சர்வாங்க தகனபலியைத் தொடர்ந்து,    அடுத்ததாகச் செலுத்துவதாகும். காளை,    ஆடு,    புறாக்குஞ்சுகள் போன்றவை பாவநிவிர்த்திக்காய் செலுத்தப்பட்ட பின்பு,    மகா பரிசுத்தமான போஜன பலியைச் செலுத்துவார்கள். இது கர்த்தருக்கு  ஞாபகக்குறியாகச் செலுத்தப்படுகிற நினைவுகூருதலின் பலி. கர்த்தர் கொடுத்த எல்லா நன்மைகளையும் நினைத்துப் பார்த்து நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தருக்குச் செலுத்துகிற பலியாகும்.

இயேசு,    நான் வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம் என்றார். அவரில் பாவமில்லை,    என்னில் பாவமுண்டு என்று யார் கூறமுடியும் என்று சவால் விட்டார். ஆக்கையால்தான்,    இயேசுவைக் குறிக்கிற போஜன பலியில்,    புளிப்பு சேர்க்கப்படுவதில்லை. புளிப்பு பாவத்திற்கு அடையாளமாய் காணப்படுகிறது. தேனையும் சேர்க்கக்கூடாது,    அது நொதித்தலையும்,    சிதைவையும் கொண்டுவரும். இயேசுவின் வாழ்க்கை சிறிதும் குறையற்றதாய்,    பிழையற்றதாக,    குற்றமற்றதாய்,    மாசற்றதாய்,    மகா பரிசுத்தமாய் காணப்பட்டது. அது சுகந்த வாசனையை வீசுகிற தூபவர்க்கத்தைப் போல வாசனையை வீசுவதாகக் காணப்பட்டது. கவனித்துப்  பார்க்கத்தக்கச்  சாட்சியுள்ள ஜீவியத்தை இயேசு செய்தார். பரிசுத்த ஆவியானவர், அபிஷேக எண்ணெய்யை அவர் மேல் அதிகமாய் ஊற்றியிருந்தார். ஆகையால் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.  

இயேசு,    கல்வாரிச் சிலுவைக்குக் கடந்து செல்லுவதற்கு முன்பு,    அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி,    அதைப் பிட்டு,    சீஷர்களுக்கு கொடுத்து,    இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவு கூறும்படிக்கு இதைச் செய்யுங்கள் என்றார். அவருடைய சரீரத்தை மெல்லிய மாவினால் செய்யப்பட்ட அப்பத்திற்கு ஒப்பிட்டார். அதுபோல பஸ்கா ஆட்டுக்குட்டியாக,    நெருப்பைப் போன்ற பாடுகளுக்குத் தன்னை உட்படுத்தி,    சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பின்பு,    அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மேல்வீட்டறையில் நடந்ததைக் குறித்து தரிசனத்தில் விளக்கினார். அதைக்குறித்து பவுல் எழுதும் போது,    நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன், என்னவெனில்,    கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,    ஸ்தோத்திரம் பண்ணி,    அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள்,    இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது, என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் என்று 1கொரி.11:24,   25ல் எழுதினார். கர்த்தருடைய பந்தி ஒரு ஞாபகக்குறியாக,    நன்றி நிறைந்த இருதயத்தோடு சிலுவையை நினைவு கூறுகிற ஆராதனையாகக் காணப்படுகிறது.  அது மகா பரிசுத்தமானது, ஆகையால் தான் ஆண்டவர்,    எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து,    இந்த அப்பத்தில் புசித்து,    இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் என்றார்,    அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து,    அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ,    அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்,    தனக்கு ஆக்கினைத்தீர்ப்பை  வருவிக்கிறவனாய் காணப்படுவான் என்றார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    இயேசுவின் சிலுவைப் பாடுகளை அனுதினமும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்துங்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாட்களிலும்,    கர்த்தருடைய பந்தியின் வேளையிலும் மட்டுமல்ல எப்பொழுதும் சிலுவை நம்முடைய தியானமாய் காணப்படட்டும். இயேசுவைப் போல,    நீங்களும் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,    தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம்  இன்னதென்று பகுத்தறியத்தக்க தாக,    உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்,    இதுவே நாம் செய்கிற புத்தியுள்ள ஆராதனையாய் காணப்படுகிறது. அனுதினமும் சாட்சியின் ஜீவியம் செய்யுங்கள்,    கிறிஸ்துவின் வாசனையை வீசுங்கள்,    அவருடைய நிருபங்களாய் காணப்படுங்கள். உலகம் உங்களில் இயேசுவைக் காணட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae