பாவமும், கிருபையும் (Sin and Grace).

ரோம 6:23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IIl_COOaNLc

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. பழைய ஏற்பாடு காலத்திலிருந்து பிலேயாமின் போதனைகளை பின்பற்றியும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை பின்பற்றி நடந்த ஜனங்களும் ஏராளம். இப்படி பாவத்தில் வாழ்கிற ஜனங்களுக்கு பாவம் கொடுக்கிற சம்பளம் மரணம் என்று வசனம் கூறுகிறது. எப்படி மாதம் முழுவதும் வேலை செய்து மாதத்தின் இறுதியில் நம்முடைய உழைப்புக்கேற்ற வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோமோ, அதுபோல, பாவம் கொடுக்கிற சம்பளம் மரணமாய் காணப்படுகிறது.

உலகத்திலிருக்கும் கடைக்கோடி ஒரு குடிமகனிலிருந்து, தேசத்தின் அதிபதி, முதல் குடிமகன் வரைக்கும் எல்லாருக்கும் மரண பயம் காணப்பட்டது, இன்னும் அநேகருக்கு இந்த மரண பயம் காணப்படுகிறது. காரணம் பாவமாய் காணப்படுகிறது. மரணபயத்திலிருந்து ஜனங்களை விடுதலையாக்கி, நித்தியஜீவனை கொடுக்கும்படி தேவன் அவருடைய அளவற்ற கிருபையை ஜனங்கள் மேல் ஊற்றினார். அவருடைய கிருபை நித்திய ஜீவனை கொடுக்கிறது. பாவம் கொடுப்பது மரணம், கிருபை கொடுப்பது நித்திய ஜீவன். தேவ கிருபையை சார்ந்து வாழ்பவர்கள் மரணத்தை பார்த்து அஞ்சமாட்டார்கள். அவர்களை பொறுத்த வரை மரணம் என்பது விஷமில்லாத தேளை போன்றது தான் என்றெண்ணிக்கொள்ளுவார்கள். ஆகையால் தான் வசனம் சொல்லுகிறது மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்பதாக. ஆகையால் இந்நாட்களில் தேவ ஜனங்கள் அதிகமாக தேவ கிருபையை சார்ந்து வாழ வேண்டும்.

ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது (ரோமர் 5:21) என்று வசனம் கூறுகிறது. இன்று நித்திய ஜீவனுக்கு போக வேண்டும் என்று தான் உலகத்திலிருக்கும் அத்தனை ஜனங்களும் வாஞ்சிக்கிறார்கள். மோட்சத்திற்கு செல்லவேண்டும், பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று, என்னென்ன பிராயசித்தம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய அனைவரும் நாடுகிறார்கள். இப்படி நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள கர்த்தர் கொடுக்கும் அடிப்படை நிபந்தனை, நாம் கிருபை பெற்றுக்கொள்ள வேண்டும், கிருபையை சார்ந்துகொள்ள வேண்டும் என்பதே. நாம் நாமாகவே, நம்முடைய சொந்த பெலத்தாலே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியாது. நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுவது கர்த்தர் கொடுக்கும் கிருபை என்பதை தேவ ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோமர் 6:14) என்ற வசனத்தின்படி, கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் கிருபை பாவம் செய்யாமல் காக்கும். கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2) என்ற வசனத்தின்படி ஆவியின் பிரமானமாகிய கிருபை, பாவம் மரணம் என்பவைகளிலிருந்து நம்மை விடுதலையாகிற்று என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org