ஓசன்னா (Hosanna).

முன் நடப்பாரும் பின் நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,  கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக, உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் (மாற்கு 11:9,10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8LlE8P78-TI

ஓசன்னா என்ற எபிரேய வார்த்தைக்கு,  கர்த்தாவே தயவுசெய்து எங்களை இரட்சியும்,  விடுவியும் என்பதாய் காணப்படுகிறது (I beg you to save or please deliver us).  ரோமர்களுடைய அடிமைத் தனத்தில் காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் இயேசுவை தாவீதின் குமாரனாய் கண்டு,  அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டு,  ரோமர்களின் ஆட்சியின் பிடியிலிருந்து எங்களை விடுவியும், இரட்சியும் என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். கர்த்தர் பூமியில் வந்ததின் நோக்கமும் அதுவாகவே காணப்படுகிறது. ஜனங்களை அரசியல் ரீதியாக அல்ல,  பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படிக்காய் வந்த மேசியா அவர். அதற்காகத் தான் இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாய் கல்வாரி சிலுவையில் கர்த்தர் தன் ஜீவனைக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே,  ஒருவேளை இதுவரைக்கும் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறவில்லையென்றால்,  இன்றைக்கே தாவீதின் குமாரனாகிய இயேசுவைச் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளுங்கள்,  ஆத்தும இரட்சிப்பு மற்ற எல்லாவற்றையும் விட மேன்மையானதாய் காணப்படுகிறது.

பொதுவாகவே ஜனங்கள் தங்கள் தலைவர்களையும்,  வெற்றிப் பதக்கங்களோடு திரும்புகிற விளையாட்டு வீரர்களையும்,  யுத்தத்தில் ஜெயித்து வருகிற தங்கள் ராணுவத்தை வரவேற்பதற்கும் எதிர்கொண்டு செல்வது வழக்கம். இயேசுவும் பலமுறை எருசலேமிற்கு வந்திருந்தும்,  இந்த முறை பிதா தனக்குக் கொடுத்த ஊழியத்தை நிறைவேற்றி வெற்றி வேந்தனாய் கழுதைக்குட்டியின் மேல் ஏறி பவனியாய் வந்தவுடன்,  ஜனங்கள் கர்த்தரின் நாமத்தாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,  ஓசன்னா என்று கூறி ஆர்ப்பரித்து தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தும்,   மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பியும் ஆண்டவரை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள்.  ஆனால் ஆண்டவர் அவர்களின் ஆர்ப்பரிப்பில் களிகூரவில்லை. காரணம் ஓசன்னா என்று ஆர்ப்பரிக்கிற இதே ஜனங்கள் தான்,  இன்னும் சில நாட்களில் சிலுவையில் அறையும் என்று கூக்குரலிடப் போகிறார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.  அதுபோல, சீயோன் குமாரத்தியே,  மிகவும் களிகூரு, எருசலேம் குமாரத்தியே,  கெம்பீரி, இதோ,  உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார், அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும்,  கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சகரியா 9:9) என்ற தீர்க்கத்தரிசன வார்த்தையின் நிறைவேறுதலாய் கூட இந்த சம்பவம் காணப்படுகிறது. நம்முடைய ராஜா நீதியுள்ளவர், நீதியாய் காரியங்களை நடப்பிக்கிறவர். அவர் ஒருவரே பாவங்களிலிருந்து இரட்சிக்கிறவர். அவர் தாழ்மையின் ராஜா,  தாழ்மையுள்ளவர்களிடம் வாசம்பண்ணுகிறவர். நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார், உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான்,  பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன் (ஏசாயா 57:15) என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே,  கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாய் தாழ்மையோடு ஜீவியுங்கள். அப்போது கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்துவார். கல்வாரிச் சிலுவையைக்குறித்துத் தியானித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களிலாகிலும் கர்த்தருடைய சிந்தை நம்மில் வளர நாம் நம்மை அர்பணிக்கிறவர்களாய் காணப்படுவோம். 

இயேசு கழுதைக் குட்டியின் மேல் ஏறி எருசலேமுக்கு சமீபமாய் வந்தபோது,  எருசலேம் நகரத்தைப்பார்த்து,  அதற்காகக் கண்ணீர் விட்டழுது,  உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்,  இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது என்றார். ஓசன்னா என்று ஜனங்கள் ஆர்ப்பரித்தாலும் அதில் களிகூராபடி,  கண்ணீர் விடுகிறவராக இயேசு காணப்பட்டார். இயேசு தன் ஊழியத்தின் நாட்களில் அனேக வேளைகளில் கண்ணீர்விட்டார் என்று வேதத்தில் வாசிக்கமுடிகிறது,  ஆனால் சிரித்தார் என்று வாசிக்கமுடியவில்லை. இப்போது எருசலேம் நகரத்தின் குடிகளுக்காகக் கண்ணீர் விட்டு அழுகிறார். கோழி தன் குஞ்சுகளைச் சிறகின் கீழ் சேர்த்தணைக்கும் வண்ணம் எத்தனையோ முறை எருசலேமின் குடிகளை தன்னோடு சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார். ஆனால் அவர்களுக்கோ மனதில்லாமல் போயிற்று. இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் காணப்பட்டார்கள். ஆகையால் இப்பொழுது கடைசியாக அவர்களுக்காகக் கண்ணீர் விட்டு அழுதார். கர்த்தருடைய பிள்ளைகளே,  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று தேவனோடு சமாதானமாகிவிட்டீர்களா? இல்லையென்றால் தேவனோடு இன்றைக்கே ஒப்புரவாகிவிடுங்கள். என்றால்தான் ஒரு நாள் பரலோகத்தில்  குருத்தோலைகளைக் கையில் ஏந்தி இரட்சிப்பின் மகிமையைக் கொண்டாட முடியும்.  இவைகளுக்குப்பின்பு,  நான் பார்த்தபோது,  இதோ,  சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும்,  ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்,  வெள்ளை அங்கிகளைத் தரித்து,  தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து,  சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள் (வெளி. 7:9, 10). பூமியில் குருத்தோலைகளை பிடிப்பது மேன்மையல்ல,  மேற்குறிப்பிட்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிற திரள் கூட்ட ஜனங்களில் நாமும் ஒருவராய்க் காணப்பட்டு பரலோகத்தில் குருத்தோலைகளை ஏந்தி தேவனைத் துதிக்க வேண்டும். அந்த கூட்டத்தில் காணப்படுகிற பாக்கியத்திற்கு ஏற்ற பாத்திரங்களாய் காணப்பட கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் வனைவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org