சிநேகிதர் வீட்டில் பட்ட காயங்கள் (Wounded at the house of my friends).

சக 13:6. அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4weFhozzd6U

நமக்கு யார் சிநேகிதர் என்று கேட்டால், அநேகர் என் பள்ளியில் படித்தவர்கள், கல்லூரியில் படித்தவர்கள், வேலை ஸ்தலங்களில் இருப்பவர்கள் என்னுடைய சிநேகிதர்கள் என்று சொல்லுவோம். மற்றொருவருடைய சுபாவம் நம்மோடு ஒத்துப்போனால், அவர்களை சிநேகிதராக்கிக்கொள்ளுவோம். இப்படியிருக்க இயேசு யாரை தன்னுடைய சிநேகிதர் என்று அழைக்கிறார்? அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களையும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களையும் தன்னுடைய சிநேகிதர் என்று சொல்லுகிறார். யோவான் 15:14ல் இயேசு சொல்லுவார், நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள் என்பதாக. மாத்திரமல்ல அவருடைய ஊழியத்தை செய்கிறவர்களை சிநேகிதர் என்று அழைக்கிறார். யோ 15:15ல் இயேசு சொல்லுவார், இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்பதாக.

இப்படிப்பட்ட சிநேகிதர் வீட்டில் இயேசு காயப்பட்டார். அநீதி செய்கிறவனும், பொய்யனும், துன்மார்க்கனும் நம்மை பார்த்து இகழ்ந்து சொல்லுகிற சிறிய வார்த்தையே நம்மால் சகிக்கமுடியவில்லை. சில வேளைகளில் மற்றவர்கள் பேசிய வார்த்தையினிமித்தம் இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இப்படியிருக்க இயேசு தன்னுடைய சிநேகிதர் வீட்டில் காயப்பட்ட போது எவ்வளவாய் அவர் துக்கப்பட்டிருப்பார். சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் அதாவது தீர்க்கதரிசனமாய் சொல் என்று சொல்லி இயேசுவுக்கு இருந்த வரத்தை குறித்து கேலி செய்தார்கள். யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி அவருடைய இராஜாங்கத்தை குறித்தும், சிங்காசனத்தை குறித்தும் கேலி செய்தார்கள். உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று சொல்லி இயேசுவுடைய ஊழியத்தை குறித்து தூஷனமான வார்த்தையை பேசினார்கள். இயேசு சொந்த ஊராரால் புறக்கணிக்கப்பட்டார். தள்ளப்பட்ட கல்லாக ஒதுக்கப்பட்டார். கூட இருந்த சீஷர்கள் தன்னை சபித்தபோது உள்ளம் உடைந்தார். நம்பி பணப்பையை கொடுத்த சீஷன் காட்டிக்கொடுத்தபோது, காயத்திலும் மேலான காயத்தை அனுபவித்தார். தன்னை சிறு புழுவாக அடையாளப்படுத்திக்கொண்டார். என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன் என்று சொன்னார். இருதயத்தை பிளக்கும் நிந்தை இயேசுவுக்கு வந்தது.

இப்படி சிநேகிதரால் பல காயங்களை அடைந்த போதும், ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோ 15:13) என்ற வசனத்தின்படி, காயங்களை உண்டாக்கிய தன்னனுடைய சிநேகிதரருக்காக, தன் ஜீவனை இயேசு கொடுத்தார். இயேசுவின் சிநேகிதர் என்றழைக்கப்படுகிற நாம் எத்தனை முறை தான் இயேசுவை காயப்படுத்தியிருப்போம்? இருந்தாலும் அவருடைய அன்பினிமித்தம் நமக்காக இயேசு தன்னுடைய ஜீவனை கொடுத்தார். இப்படி நமக்காக ஜீவனை கொடுத்த சிநேகிதர் மீது சிநேகம் பெருகட்டும். சூலமித்தி தன் சிநேகத்தை வெளிப்படுத்தும்போது சொல்லுவாள் அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர் (உன் 5:16) என்பதாக. அதுபோலவே, நமக்காக சிலுவையிலறையப்பட்ட இயேசுவே நம்முடைய சிநேகிதர்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org