இயேசு நம்முடைய குற்றநிவாரண பலி (Jesus is our guilt offering).

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ஒருவன் கர்த்தருக்குரிய  பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து,    அறியாமையினால்  பாவத்துக்குப்பட்டால் …. குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்,    அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவி. 5:14-16).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ReuFDlhYVf4

லேவியராகமம் ஒன்று முதல் ஏழு அதிகாரங்களில் ஐந்து விதமான பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகளில் ஐந்தாவது பலி குற்ற நிவாரண பலியாகும். ஒருவன் கர்த்தருக்குரிய  பரிசுத்தமானவைகளில்  அறியாமையினால் குற்றஞ்செய்து பாவத்திற்குப்பட்டால் செலுத்த வேண்டிய பலி குற்ற நிவாரண பலியாகும்.  கர்த்தருக்குப் பரிசுத்தமான  பணிமுட்டுகளை எடுத்தாலும்,    தவறுதலாய் பயன்படுத்தினாலும் அதற்காய் பலி செலுத்தப்ப்டவேண்டும். அதற்குரிய நஷ்டத்தைச் செலுத்தி,    அதனோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி,    ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.   கர்த்தருடைய காரியங்களில் தவறுதலாக நடக்கிற தப்பிதங்களுக்குக் கூட மன்னிப்பு தேவை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளுகிறோம். அதுபோல இஸ்ரவேலர்கள் தங்கள் சகோதரர்களை பணக்காரியங்களில் ஏமாற்றினாலும்,    மற்றவர்களைத் திருடினாலும் இருபது சதவிகித அதிகமான தொகையை அசலோடு  திரும்பக் கொடுத்து பாவமன்னிப்பைப் பெறவேண்டும். குறிப்பாக இழப்பீடுகளைச் சரிசெய்வதற்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட பலியாகக் குற்றநிவாரணபலி காணப்படுகிறது. தவறு செய்தவர்கள் வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது,    நஷ்டத்தையும் ஈடுகட்ட வேண்டும்.

ஒருநாள் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மேல் கர்த்தருடைய கரம் அமர்ந்தது. அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டான். அவர் அவன் தூக்கி அவனை பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய் எருசலேம் தேவாலயத்தின் அருவருப்புகளைக் காண்பித்தார். இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும்,    அவர்கள் ஆசாரியர்களும்,    அவனவன் தன்தன் கையிலே தன்தன்  தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு,    விக்கிரகங்களுக்கு முன்பாக நின்றார்கள்,    தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று. அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்,    சூரியனை நமஸ்கரிக்கிற புருஷர்களைக் காண்பித்தார். அந்நாட்களைப் போல் இந்நாட்களிலும் சபைகளில் கர்த்தர் வெறுக்கிற பலவிதமான அருவருப்புகளை விசுவாசிகளும்,    ஊழியர்களும் செய்கிறார்கள். தவறு என்று அறிந்தும் துணிகரமான காரியங்களைச் செய்கிற திரளானவர்கள் இந்நாட்களில் உண்டு. அரசியல் செய்கிறவர்களும்,    மாம்சீக கிரியைகளில் காணப்படுகிறவர்களும்,    கர்த்தருடைய  காணிக்கைகளைத் திருடுகிறவர்களும்,    கடன்வாங்கித்  திரும்பக்  கொடுக்காதவர்களும்,    ஆலயத்தின் பொருட்களைக் கரிசனையோடு பயன்படுத்தாதவர்களும் காணப்படுகிறார்கள். பிரிவினைகளையும்,    இடறல்களையும் உண்டுபண்ணி கர்த்தருக்கு விரோதமாகக் குற்றம் புரிகிறவர்களும் உண்டு. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    கல்வாரிச் சிலுவையில் இயேசு நம்முடைய குற்ற நிவாரண பலியாக மரித்தார். அவருடைய ஆலயத்திலும்,      ஊழியங்களிலும் அறியாமையினாலும்,    துணிகரமாகவும் செய்த தவறுகள் மன்னிக்கப் படவேண்டும். சிலுவையண்டை வந்து ஆண்டவரிடம் உங்கள் தவறுகளை அறிக்கையிடுங்கள். அவர் உங்களை மன்னிப்பதற்கு தயை உள்ளவராய் காணப்படுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.



Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar