இயேசு,     நம்முடைய  சர்வாங்கதகனபலி (Jesus, is our burnt offering).

கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு,     அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்,     உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த வந்தால்,     மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து,     பலிசெலுத்த வேண்டும். அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகனபலியானால்,     அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக(லேவி. 1:1-3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cRPs1YBHmDk

லேவியராகமம் ஒன்று முதல் ஏழு அதிகாரங்களில் ஐந்து விதமான பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் அனைத்தும் இயேசு நமக்காக கல்வாரிச் சிலுவையில் பலியானதையும்,     அதினிமித்தம் நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது. அவைகளில் முதல் பலி சர்வாங்கதகனபலியாகும். பழைய ஏற்பாட்டின் நாட்களில் காளை,     செம்மறியாடு,     வெள்ளாடு,     காட்டுப்புறாக் குஞ்சுகளைத் தகனபலியாகச் செலுத்தும் போது அவைகள் முழுவதுமாக பலிபீடத்தின் மேல் சுட்டெரிக்கப்பட வேண்டும். இது இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவநிவிர்த்திக்காகச் செலுத்தப்படுகிற பலி.  பலியிலிருந்து மேலே புகை எழும்பும் போது,     கர்த்தர் அதை சுகந்த வாசனையான முகர்ந்து ஜனங்களை நினைத்தருளி அவர்கள் மீறுதல்களை மன்னிப்பார்.  முதல்முதலாக நோவா கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான் என்று வேதத்தில் எழுதப்பட்டிருந்தாலும்(ஆதி.8:20),     அதற்கு முன்பு ஆபேல்,     மந்தையின் தலையீற்றுகளிலும்  அவைகளில்  கொழுமையானவற்றிலும் கொண்டுவந்து கர்த்தருக்கு  சர்வாங்கதகனபலியாக  செலுத்தினான். 

சர்வாங்கதகனபலி,     இயேசு கல்வாரிச் சிலுவையில் தன்னை முழுவதுமாய் பழுதற்ற பலியாய் நமக்காக  ஒப்புக்கொடுத்ததைக் குறிக்கிறது. மனுகுலத்தின் பாவநிவிர்த்திக்காகத் தன்னையே முழுவதுமாய் கொடுத்த தன் குமாரனுடைய ஒரேபலியைப் பிதாவாகிய தேவன் அங்கீகரித்து,     அதை சுகந்த வாசனையாக  ஏற்றுக்கொண்டார். பிதாவுக்கும் நமக்கும் இடையே காணப்பட்ட தடைச்சுவர் முழுவதுமாய் தகர்க்கப்பட்டது,     இயேசுவின் ரத்தத்தின் நீதியினால் தைரியமாக கிருபாசனத்தண்டை கடந்து செல்லும் பாக்கியத்தை நாம் பெற்றுக்கொண்டோம். இனி பாவமன்னிப்பிற்கு என்று வேறொரு பலி செலுத்த வேண்டிய அவசியமில்லை. காளை,     வெள்ளாட்டுக்கடா,     புறாக்குஞ்சுகள் போன்ற பழைய ஏற்பாட்டின் பலிகள் இனி செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

கர்த்தருடைய பிள்ளைகளே,     பாவத்தின் பாரத்தை இனி யாரும் சுமக்கவேண்டியதில்லை. நம்பிக்கையோடு சிலுவையண்டை வந்து,     இயேசுவே உம்முடைய ரத்தத்தினால் என் பாவங்களற என்னைக் கழுவும் என்று நீங்கள் ஏறெடுக்கிற ஒரு சிறிய ஜெபம் உங்கள் வாழ்க்கையை முழுவதுமாய் மாற்றும். நீங்கள் புது சிருஷ்டியாக மாறுவீர்கள்.  இயேசு சிலுவையில் முழுவதுமாய் தன்னைப் பிதாவுக்கு அர்ப்பணித்ததைப் போல,     உங்களை முழுவதுமாய் இயேசுவுக்கு அர்ப்பணித்து விடுங்கள். பூரண சமர்ப்பணம் உங்களில் காணட்டும்.  உங்கள் வாழ்க்கையிலிருந்து  கிறிஸ்துவின்  வாசனை எழும்பட்டும். உலகத்தின் குடிகள் இயேசுவின் சுபாவங்களை உங்களில் காணட்டும். அதினிமித்தம் உங்கள் வெளிச்சத்தில் நடக்க அனேகர் விரும்புவார்கள். இயேசுவின் வருகையில் அவர் உங்களை சேர்த்துக்கொண்டு தன்னோடு சிங்காசனத்தில் அமரும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae