பச்சைமரமும், பட்டமரமும் (Green tree & Dry tree).

லுக் 23:31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VgZrhsS4Fng

பச்சைமரம் என்பது இயேசுவையும் பட்டமரம் என்பது உலர்ந்த எலும்புகளை போல ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கி போனவர்களையும் குறிக்கிறதாய் காணப்படுகிறது. பச்சைமரமாகிய இயேசுகிறிஸ்து மிகவும் கனிகொடுக்கிறவராக, எல்லாரும் அவருடைய நிழலில் வந்தடையத்தக்கவராக காணப்பட்டார். அப்படி இருந்தும் இயேசு பல பாடுகளை சகித்தார். இயேசு பாடுபட்டதால் நாம் பாடுபட தேவையில்லை என்றும், இயேசு ஜெபித்ததால் நாம் ஜெபிக்க தேவையில்லை என்றும், இயேசு இருக்கும்போதே சீஷர்கள் தூங்கியதால் நாம் இன்று நன்றாக தூங்கலாம் என்றும் சொல்லுகிற வஞ்சிக்கிற அநேக கள்ள ஊழியர்கள் தேசங்களில் பெருகிவிட்டார்கள். அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் ஆமென் என்றும் அல்லேலூயா என்றும் ஆர்ப்பரிக்கிற ஏராளமான ஜனங்கள் பெருகிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களின் செய்தி முகநூலிலும், குறுஞ்செய்திகளிலும் அதிகமாக பரவிக்கொண்டிருப்பதையும் இந்நாட்களில் நாம் பார்க்கிறோம். சாத்தான் எவ்வளவாய் அநேகரை வஞ்சித்துவிட்டான் என்பதை அறிந்து, உணர்வடையும் நாட்களில் நாம் இருக்கிறோம்.

நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் (2 தீமோ 2 :11,12) என்ற வசனத்தின்படி நமக்கு முன்பாக பல பாடுகள் இருப்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதை ஏற்றுக்கொள்ள அநேகருடைய மனதில் பக்குவமில்லை; ஆனால் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு சீஷராக வேண்டும் என்பதே தேவனுடைய வாஞ்சையாய் காணப்படுகிறது.

பச்சைமரமாகிய இயேசுவையே பிசாசு பிடித்தவன் என்றும், மதிமயங்கி இருக்கிறார் என்றும் சொல்லுவார்களென்றால் பட்டமரத்தின் நிலைமை என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். சொல்லிலும் செயலிலும் நடக்கையிலும் ஒரு பாவமும் செய்யாத பச்சைமரமாகிய இயேசுவையே புண்படும்படியாக பேசி இருப்பார்களென்றால், பட்டமரத்திற்கு எம்மாத்திரம் ?

சொந்த குடும்பமே உங்களுக்கு விரோதமாக எழும்பினால் எப்படி இருக்கும்? நெருங்கிய நண்பனே தன்னுடைய குதிகாலை உங்களுக்கு விரோதமாக தூக்கினால் எப்படி இருக்கும்? நம்பி பணப்பையை கொடுத்தவனே உங்களை பணத்திற்காக காட்டிக்கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நம்பிக்கை துரோகம் செய்தவனை கண்டால் உங்கள் மனம் எவ்வளவு அதிகமாக வேதனைப்படும்? கூட இருந்தவர்களே உங்களை சபித்தால் எப்படி இருக்கும் ? இப்படிப்பட்ட எல்லா பாடுகளையும் பச்சைமரமாகிய இயேசு சகித்தார். ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு பல நாட்களாகியும் அறியாமல் உணராமல் இருக்கும் பட்டமரத்திற்கு எவ்வளவாய் சம்பவிக்கும் என்று இயேசு தன்னுடைய சிலுவை மரணத்திற்கு முன்பாக சொன்னார்.

பச்சைமரத்தை போன்று வாழ முயற்சிக்கும்போது வரும் பாடுகள் உபாத்திரவங்களுக்கு பின்பாக ஆண்டவர் ஆளுகையை வைத்திருக்கிறார் என்ற நிச்சயத்தில் பரம அழைப்பின் பந்தைய பொருளை பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களோடுகூட இருப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org